சுந்தர்.சி - வடிவேலு இணையும் ‘கேங்கர்ஸ்’
சுந்தர்.சி மற்றும் வடிவேலு இணைந்து பணிபுரிந்து வரும் படத்துக்கு ‘கேங்கர்ஸ்’ என தலைப்பிட்டுள்ளது படக்குழு. சுந்தர்.சி இயக்கத்தில் காமெடியனாக வடிவேலு நடித்த படங்கள் யாவுமே மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பினை பெற்றவை. இப்போது காமெடி சேனல்களில் இந்தக் கூட்டணியின் காமெடி பிராதன இடத்தை தினமும் பிடிக்கும். 15 ஆண்டுகளாக இந்தக் கூட்டணி இணைந்து படம் பண்ணாமல் இருந்தார்கள். ’அரண்மனை 4’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, மீண்டும் சுந்தர்.சி இயக்கத்தில் வடிவேலு நடித்துள்ளார். இதில் சுந்தர்.சி நாயகனாக நடித்திருந்தாலும், ‘கேங்கர்ஸ்’ சிங்காரம் என்ற முக்கிய கதாபாத்திரத்தில் வடிவேலு நடித்துள்ளார்.
மேலும் கத்ரீன் தெரசா, முனீஸ்காந்த், பக்ஸ், மைம் கோபி, ஹரிஷ் பேரடி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு சுமார் 90% வரை முடிவடைந்துவிட்டது. ‘கேங்கர்ஸ்’ எனத் தலைப்பிட்டுள்ள இந்தப் படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று (செப்.12) வெளியாகி ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் ரிலீஸாகியுள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் படத்தினை வெளியிட வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறார் சுந்தர்.சி. ‘கேங்கர்ஸ்’ பணிகளை முடித்த கையோடு நயன்தாரா நடிக்கும் ‘மூக்குத்தி அம்மன் 2’ பணிகளை தொடங்க உள்ளார். இதனை வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதன் முதல் தோற்றம் வெளியாகி உள்ளது.