‘சூர்யா 44’ கேங்ஸ்டர் படமல்ல: கார்த்திக் சுப்புராஜ்
‘சூர்யா 44’ கேங்ஸ்டர் படமல்ல என்று தெரிவித்துள்ளார் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் ‘சூர்யா 44’. இதில் பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ், கருணாகரன் உள்ளிட்ட பலர் சூர்யாவுடன் நடித்துள்ளனர். 2டி மற்றும் ஸ்டோன் பெஞ்ச் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. இதன் படப்பிடிப்பை ஒரே கட்டமாக முடித்து இறுதிகட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனிடையே, ‘சூர்யா 44’ படத்தின் வீடியோக்களை வைத்து இது கேங்ஸ்டர் படம் என பலரும் கருதினார்கள். ஆனால், அந்தப் படத்தின் களம் குறித்து கார்த்திக் சுப்புராஜ், “நான் படம் பண்ணாலே கேங்ஸ்டர் படம் தான் என முடிவு செய்துவிடுகிறார்கள். ஆனால், ‘சூர்யா 44’ கேங்ஸ்டர் படம் அல்ல. அதுவொரு காதல் கதை, அதில் நிறைய ஆக்ஷன் இருக்கும்.
எனக்கு நீண்ட நாட்களாகவே ஒரு காதல் கதை பண்ண வேண்டும் என்று ஆசை. சூர்யா சார் – பூஜா ஹெக்டே இருவரையும் வைத்து அதை செய்ததில் மகிழ்ச்சி. பலரும் கூறுவது போல் அது கேங்ஸ்டர் படமல்ல. ஒரு நடிகராக சூர்யா சாரை ரொம்பவே பிடிக்கும்.
’ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படத்துக்கு முன்பே இந்தக் கதையை அவரிடம் கூறினேன். கதையின் மீதுள்ள அந்த ஆர்வம் அவர் கேட்கும்போதே தெரியும். நாம் எழுதிய காட்சியில் அவர் நடிப்பதை பார்க்கும் போதே அழகாக இருக்கும். ஒவ்வொரு காட்சியை பற்றியும் அவ்வளவு விஷயங்கள் பேசுவார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது.
இப்போதைக்கு கோடை விடுமுறைக்கு வெளியிடலாம் என திட்டமிட்டு இருக்கிறோம். இசை, எடிட்டிங் உள்ளிட்ட இறுதிகட்டப் பணிகளுக்கு நேரம் எடுத்துக் கொள்ளலாம் என முடிவு செய்திருக்கிறேன். ஆனால், வெளியீட்டு தேதியாக இன்னும் எதுவும் முடிவு செய்யவில்லை.” என்று தெரிவித்துள்ளார் கார்த்திக் சுப்புராஜ்.