'சூர்யா 44' படப்பிடிப்பு நிறைவு - ரிலீஸ் தேதி எப்போது?
இயக்குநர் கார்த்திக்சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்கும் 44வது படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவு பெற்றதாக படக்குழு அறிவித்துள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் சூர்யா. இவர் கடந்த 1997ம் ஆண்டு வசந்த் இயக்கத்தில் வெளிவந்த நேருக்கு நேர் என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். இப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. அதனைத்தொடர்ந்து பல படங்களில் நடித்து முன்னணி நடிகராக உயர்ந்தார். இதனையடுத்து, தற்போது இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில், 'கங்குவா' என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் வரும் 10ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், ரஜினியின் வேட்டையன் படம் வருவதால் கங்குவா படத்தின் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டு நவம்பர் 14ம் தேதிக்கு மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து சூர்யா, இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனது 44வது தற்போது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனமும், ஸ்டோன் பென்ஞ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. இதில் சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க உள்ளார். மேலும், ஜெயராம், கருணாகரன், மலையாள நடிகர் ஜோஜூ ஜார்ஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜூன் மாதம் தொடங்கியது.
இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டதாக படக்குழு அறிவித்துள்ளது. இதுகுறித்து சூர்யா தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார். மேலும் இப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாக உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.