சூர்யாவின் படத்தை துவங்கும் சிறுத்தை சிவா.. விரைவில் படப்பிடிப்பு
பாண்டியராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு 90 சதவீதம் முடிவடைந்துவிட்டது. தற்போது குற்றாலத்தில் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்னும் இரு பாடல்களின் படப்பிடிப்பு மட்டுமே எடுக்கப்பட வேண்டும். இதுவும் முடிந்துவிட்டால் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நிறைவுபெற்று விடும் என கூறப்படுகிறது.
இந்த படத்திற்கு பிறகு வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாக உள்ள ‘வாடிவாசல்’ படத்தில் சூர்யா நடிக்கவிருந்ததாக கூறப்பட்டது. கடந்த ஆண்டே துவங்க திட்டமிட்ட இப்படம் சில காரணங்களால் மிகவும் தாமதமாக அடுத்த மாதம் துவங்கும் என சமீபத்தில் தகவல் வெளியானது. ஆனால் வெற்றிமாறன் இயக்கி வரும் விடுதலை திரைப்படத்தின் படப்பிடிப்பு திட்டமிட்டப்படி முடியவில்லை என்று கூறப்படுகிறது.
அதனால் வாடிவாசல் படத்திற்கு முன்பாக சிறுத்தை சிவா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க சூர்யா முடிவு செய்துள்ளார். தற்போது சிறுத்தை சிவா, ‘அண்ணாத்த’ படத்தின் ஒட்டுமொத்த பணிகளையும் முடித்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோன்று ‘அண்ணாத்த’ படத்தின் தயாரிப்பு பணிகள் நடக்கும்போது சூர்யா படத்தின் முதற்கட்ட பணிகளை சிறுத்தை சிவா துவங்கிவிட்டார். முதற்கட்ட பணிகள் முடித்துவிட்டதால் சூர்யா படத்தின் படப்பிடிப்பை விரைவில் சிறுத்தை சிவா துவங்க திட்டமிட்டுள்ளாராம். சூர்யாவும் எதற்கும் துணிந்தவன் படத்தை முடிக்கவுள்ளதால் இரண்டரை மாதம் கால்ஷீட் கொடுத்திருக்கிறாராம். இதனால் விரைவில் சூர்யா மற்றும் சிறுத்தை சிவா படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.