'வேட்டையன்' வருகையால் 'கங்குவா' ரிலீஸ் தள்ளி போகிறதா - சூர்யா சொன்னது என்ன?
ரஜினிகாந்த் மூத்தவர், சினிமாவின் அடையாளம், 50 வருடமாக நடித்து வருகிறார் என்பதால் வேட்டையன் படத்திற்கு நாம் வழிவிடுவோம் எனவும், 'கங்குவா' படம் வெளியாகும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார். கோவை கொடிசியா அரங்கத்தில் 'மெய்யழகன்' (Meiyazhagan) திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நடிகர்கள் சிவகுமார், சூர்யா, கார்த்தி, அரவிந்த் சுவாமி, நடிகை ஸ்ரீ திவ்யா, இயக்குநர் பிரேம்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த திரைப்படத்தில் "யாரோ, இவன் யாரோ" என்ற பாடலை நடிகர் கமல்ஹாசன் பாடியுள்ளார். கமல்ஹாசன் பாடல் பாடியதை ஒலிப்பதிவு செய்த போது எடுக்கப்பட்ட வீடியோ இசை நிகழ்ச்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.
அப்போது நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சிவக்குமார், "சூலூர் அருகே உள்ள காசிகவுண்டர்புதூர் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவன். குடிநீர், கழிப்பிடம், சாலை வசதி இல்லாத ஊரில் படித்து முன்னேறியவன். 7 வருடம் படிக்க எனக்கு, 7 ஆயிரம் தான் செலவு ஆனது. சினிமா நடிகர் என்பதால் எனக்கு யாரும் பெண் தரவில்லை. புஞ்சை புளியம்பட்டி பகுதியில் தான் எனக்கு பெண் தந்தார்கள். சூர்யா, கார்த்தி சினிமாவிற்கு வரக்கூடாது என ஒளித்து வைத்திருந்தேன். ஆனால், கடவுள் அவர்களை சினிமாவிற்கு வர வைத்துவிட்டார். தமிழர்கள் போட்ட பிச்சை தான் இவ்வளவும், எப்போதும் உங்களின் அன்பும், ஆதரவும் வேண்டும்" எனத் தெரிவித்தார்.
நடிகர் சூர்யா மேடையில் பேசுகையில், "நேற்று இரவு இந்த படத்தை நான் பார்த்தேன். படத்தில் நடித்த அனைவரும் அருமையாக நடித்துள்ளனர். இப்படத்தின் தயாரிப்பாளர் என்பதில் அனைவருக்கும் நன்றி சொல்லி வருகிறேன். ஜெய்பீம் இயக்குநர் மூலம் தான் படம் என்னிடம் வந்தது. தொப்புள் கொடி உறவு, எங்களுடைய வேர், எங்களின் அடையாளம் கோவை தான்.
நடிக்க வந்து 27 வருடம் ஆகிவிட்டது. ஆனால் இந்த படத்திற்கு கோவையில் விழா எடுப்பது ரொம்ப மகிழ்ச்சி. இரத்த சொந்தங்கள் நம்மைச் சுற்றி நிறைய பேர் இருக்கிறார்கள். எதையும் எதிர்பார்க்காமல் கொடுக்கும் அன்பு மிக பரிசுத்தமானது. பருத்தி வீரன் படத்திற்குப் பிறகு கார்த்தியை கட்டிப் பிடித்த படம் இது. அரவிந்த் சுவாமி, கார்த்தி இருவருக்கும் உள்ள பழக்கம் மிகவும் பொறாமைப்படும் அளவிற்கு உள்ளது.