×

 8 வயது சிறுவனிடம் பணத்தை பறிகொடுத்த தமிழ் நடிகை...!

 

8 வயது சிறுவனிடம் பணத்தை பறிகொடுத்ததாக தமிழ் நடிகை ஒருவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செய்துள்ள பதிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

’ஒரு நாள் கூத்து’ என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நிவேதா பெத்துராஜ். அதன் பின்னர், ’பொதுவாக எம்மனசு தங்கம்’, ’டிக் டிக் டிக்’, ’திமிரு புடிச்சவன்’, ’சங்கத்தமிழன்’, ’பொன் மாணிக்கவேல்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது தமிழில் 'பார்ட்டி’ என்ற திரைப்படத்தில் நடித்துக்கொண்டு இருக்கிறார்.

இந்த நிலையில், சமூக வலைதளங்களில் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் பிரபலமான நிவேதா பெத்துராஜுக்கு 4 மில்லியனுக்கும் அதிகமான ரசிகர்கள் உள்ளனர். இதன் அடிப்படையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னிடம் 8 வயது சிறுவன் பணத்தை பறித்துக் கொண்டுவிட்டதாக ஒரு பதிவு செய்துள்ளார். அதன்படி, அடையார் சிக்னல் அருகே கார் நின்று கொண்டிருக்கும் போது ஒரு சிறுவன் தன்னிடம் 50 ரூபாய்க்கு புத்தகத்தை விற்பனை செய்ய வந்ததாகவும், நான் 100 ரூபாய் கொடுத்தபோது அந்த சிறுவன் 500 ரூபாய் வேண்டும் என்று கேட்டதாகவும், உடனே புத்தகத்தை திருப்பிக் கொடுத்துவிட்டு 100 ரூபாய் வாங்கிக் கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

அப்போது திடீரென, புத்தகத்தை காருக்குள் வீசிய அந்த சிறுவன் தனது கையில் இருந்த பணத்தை பறித்துக் கொண்டு ஓடிவிட்டதாகவும் கூறியுள்ளார். இதே போன்ற பிரச்சனையை நீங்களும் சந்தித்தீர்களா என கேள்வி எழுப்பியுள்ள நிவேதா பெத்துராஜின் இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.