×

தமிழில் பட தலைப்பு  - மெய்யழகன் இயக்குநர் விளக்கம்! 

 

96 படத்தின் இயக்குநர் பிரேம்குமார் இயக்கத்தில், நடிகர்கள் கார்த்தி - அரவிந்த் சாமி நடித்துள்ள படம் மெய்யழகன். இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ள இப்படம் வருகிற 27ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், இப்படத்தின் ஃப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி இன்று சென்னை எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர்கள் கார்த்தி, அரவிந்த் சாமி, இயக்குநர் பிரேம்குமார், நடிகை ஸ்ரீதிவ்யா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி மேடையில் பேசிய நடிகர் அரவிந்த் சாமி, "நான் நடிக்க முடியும் என நினைத்து எனக்கு இந்த வாய்ப்பு வழங்கிய இயக்குநருக்கு நன்றி. இந்த படத்தின் கதை என் வாழ்வில் நடந்த கதை. படம் வெளியான பிறகு என் கதையைச் சொல்கிறேன். இது எனக்கு ஒரு சிறப்பான படம். 90களில் படம் நடிக்க ஆரம்பித்தேன். ஒரு சில படங்கள் மட்டுமே எனக்கு இது போன்று நேர்மறை எண்ணங்கள் அடங்கிய படங்களாக அமைந்துள்ளது.

அரவிந்த் சாமி போன்று ஒரு மாப்பிள்ளை வேண்டும் என்று சொல்வார்களே, அது பற்றி உங்கள் கருத்து குறித்த கேள்விக்கு, அவர்களுக்கு எல்லாம் என்னைப் பற்றி தெரியாது என நினைப்பேன். ஏதோ படத்தில் நடிப்பதை பார்த்துவிட்டு நடிகர்கள் அப்படியாகவே இருப்பார்கள் என நினைக்கிறார்கள்" என பதிலளித்தார்.

இயக்குநர் பிரேம் குமார் பேசுகையில், "6 வருடம் கழித்து உங்களைப் பார்ப்பதே மகிழ்ச்சியாக உணர்கிறேன். எவ்வளவு அழகான பயணமாக இருந்ததோ அவ்வளவு கடின உழைப்பாகவும் இருந்தது. முதலில் தங்கை கதாபாத்திரத்திற்காக தான் ஶ்ரீதிவ்யாவை அழைத்தோம். அது அவருக்கு ஏற்புடையதாக இல்லை பிறகு மீண்டும் வேறு ஒரு கதாபாத்திரத்தில் ஒப்பந்தம் செய்தோம்.

படத்தில் தமிழ் பெயர்கள் இடம்பெற்றுள்ளது பற்றிய கேள்விக்கு, தமிழ் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து கொண்டிருக்கிறது. தமிழ் மெல்ல சாவும் என முன்பு ஒரு அறிஞர் சொன்னதுபோல நம்மை விட்டுச் சென்று கொண்டிருக்கிறது. தமிழ் மீண்டும் வரட்டுமே என நினைத்து தான் இப்படி ஒரு முயற்சியை எடுத்தோம். படத்தின் பெயர் கூட தூய தமிழில் தான் வைத்துள்ளோம்" என்றார்.