×

தங்கலான் ஓ.டி.டி. ரிலீஸ் - தயாரிப்பாளர் சொன்ன அப்டேட்

 

பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியான திரைப்படம் தங்கலான். இப்படத்தில் பார்வதி, மாளவிகா மோகன், பசுபதி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ஞானவேல் ராஜா தயாரித்திருந்த இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருந்தார். கோலார் தங்க வயலை மையப்படுத்தி உருவாகியிருந்த இப்படம் தமிழ் ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தையே பெற்றது. இருப்பினும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று ரூ.100 கோடி கிளப்பில் இணைந்தது. மேலும் தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் நல்ல வரவேற்பை பெற்றது.

இப்படத்திற்கு திருமாவளவன் எம்.பி., சீமான், சேரன் உள்ளிட்ட பலர் பாராட்டு தெரிவித்தனர். இதையடுத்து படத்திற்கு கிடைத்த வரவேற்பு தொடர்பாக படக்குழுவினருக்கு உணவு விருந்து வைத்தார் விக்ரம். இப்படத்தை மகாராஷ்டிராவில் முதல் முறையாக 16 கிராமத்தை சேர்ந்த 200 பழங்குடியின பெண்கள் திரையரங்கில் பார்த்து மகிழ்ந்துள்ளனர். இப்படத்தின் ஓ.டி.டி. அப்டேட் இதுவரை வெளியாகாத நிலையில் அதை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர் ரசிகர்கள். ஆனால் திருவள்ளூரைச் சேர்ந்த பொற்கொடி என்பவர், புத்த மதம் குறித்து புனிதமான முறையிலும், வைண மதம் குறித்து நகைச்சுவையாகவும் காட்சிகள் இருப்பதால் ஓ.டி.டி.-யில் வெளியான பிறகு இரு பிரிவினர் இடையே மோதல் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் இப்படத்தை ஓ.டி.டி.-யில் வெளியிடத் தடை விதிக்க வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கின் விசாரணை இன்னும் முடிவுக்கு வரவில்லை. 

இந்த நிலையில் இப்படத்தின் ஓ.டி.டி. அப்டேட் குறித்து தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பேசியுள்ளார். பிரபல ஊடகத்திற்கு அவர் அளித்த பேட்டியில், “படத்தை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளார்கள். தங்கலான் பெரிய படம் என்பதால் பண்டிகை சமயங்களில் வெளியிட திட்டமிட்டுள்ளார்கள்” என்றார். மேலும் தீபாவளிக்கு படத்தை வெளியிடும் ப்ளானில் நெட்ஃபிளிக்ஸ் இருப்பதாக கூறியுள்ளார். விரைவில் நெட்ஃபிளிக்ஸ் நிறுவனத்திடம் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு ரிலீஸ் தேதியுடன் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.