ஆண்டவரின் 65 ஆண்டுகால திரைப்பயணம்... வாழ்த்து கூறிய 'தக் லைஃப்' படக்குழு...
தமிழ் சினிமாவின் ஆண்டவர் என கொண்டாடப்படும் உலகநாயகன் கமல்ஹாசன் திரையுலகிற்கு கிடைத்த மாபெரும் பொக்கிஷம். குழந்தை நட்சத்திரமாக 1960ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியான 'களத்தூர் கண்ணம்மா' படத்தின் மூலம் சினிமாவுக்கு அடியெடுத்து வைத்த அவர் இன்றுடன் 64 ஆண்டுகால திரைப்பயணத்தை நிறைவு செய்து 65வது ஆண்டுக்குள் அடியெடுத்து வைக்கிறார். இந்த நாளன்று கமல்ஹாசன் திரையுலகிற்கு கொடுத்த பங்களிப்பை நினைவு கூறுகையில் ஆச்சரியமாகவும் மலைப்பாகவும் இருக்கிறது. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழிகளிலும் சிறப்பாக பயணித்து வந்த உலகநாயகன் இன்றும் அதே கம்பீரத்துடன் சிங்க நடை போட்டு வருகிறார். சமீபத்தில் அவரின் நடிப்பில் வெளியான கல்கி 2898 AD திரைப்படத்தில் வில்லனாக நெகட்டிவ் கதாபாத்திரத்தில் மிரட்டி இருந்தார். படம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் கமலின் நடிப்பு பாராட்டுகளை குவித்தது.
நாயகன்' படத்திற்கு பிறகு மணிரத்னம் - கமல்ஹாசன் கூட்டணியில் 37 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது உருவாகி வரும் திரைப்படம் 'தக் லைஃப்'. படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு மிகவும் மும்மரமாக நடைபெற்று வருகிறது. நவம்பர் அல்லது டிசம்பரில் இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரு ஜாம்பவான்கள் பல ஆண்டுகளுக்கு பிறகு இணைவதால் இப்படம் குறித்த எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகமாக உள்ளது. நடிகர் கமல்ஹாசன் தன்னுடைய 65 ஆண்டு கால திரைவாழ்க்கையை போற்றும் விதமாக அவரின் வீடியோ ஒன்றை பகிர்ந்து வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர் 'தக் லைஃப்' படக்குழுவினர். வழி நெடுக நின்று கைதட்டி அவரை வரவேற்கும் இந்த வீடியோ ரசிகர்களின் கவனம் பெற்று வருகிறது.