×

தங்கலான் பட வெற்றி விருந்து விழா; படக்குழுவினருக்கு உணவு பரிமாறிய விக்ரம்..!

 

தங்கலான் திரைப்படம் திரையரங்குகளில் நல்ல வசூலை குவித்து வரும் நிலையில், படக்குழுவினருக்கு அளிக்கப்பட்ட விருந்தில் கலந்து கொண்ட நடிகர் விக்ரம் அவர்களுக்கு உணவு பரிமாறி அசத்தினார். பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி உள்ளிட்ட பலர் நடித்த ‘தங்கலான்’ திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியானது. ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா தயாரித்த இப்படத்திற்கு ஜீ.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியான தங்கலான் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. ஆனாலும் வசூலில் சாதனை படைத்து வருகிறது.

தமிழ் மற்றும் தெலுங்கில் இதுவரை ரூ.70 கோடி வரை வசூலித்துள்ள தங்கலான் திரைப்படம், வரும் 30ஆம் தேதி இந்தியில் வெளியாக உள்ளது. இதன் மூலம் ரூ.100 கோடி வசூலை விரைவில் எட்டிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படத்தில் விக்ரமின் நடிப்பும், உழைப்பும் ரசிகர்களை கவர்ந்தது.அதேபோல் மாளவிகா மோகனன், பார்வதி ஆகியோரின் நடிப்பு மற்றும் ஜிவி பிரகாஷின் பின்னணி இசை, பாடல்கள் மிகப் பெரிய வரவேற்பை பெற்றன.தற்போது வரை தங்கலான் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது.இந்நிலையில் இப்படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் படக்குழுவினர் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு விருந்து அளிக்கப்பட்டது. தங்கலான் பட வெற்றி விருந்து விழாவில் கலந்து கொண்ட நடிகர் விக்ரம் அனைவருக்கும் தனது கைகளால் உணவு பரிமாறி அசத்தினார்.

பிரபல சமையல் நிபுணர் மாதம்பட்டி ரங்கராஜ் தயாரித்த உணவு வகைகள் அங்கிருந்தவர்களுக்கு மிகப் பெரிய விருந்தாக இருந்தது எனலாம். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. விக்ரம் தற்போது அருண்குமார் இயக்கத்தில் 'வீர தீர சூரன்' என்ற படத்தில் நடித்து வருகிறார்.