ஓடிடியில் ‘தங்கலான்’ வெளியீடு தாமதம்: பின்னணி என்ன?
ஓடிடியில் ‘தங்கலான்’ படம் வெளியீட்டில் தாமதம் ஏன் என்பதற்கான காரணம் தெரியவந்துள்ளது. பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம், பார்வதி, மாளவிகா மேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘தங்கலான்’. ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்து வெளியிட்ட இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருந்தார். ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியான இந்தப் படம் விமர்சன ரீதியாக வரவேற்பைப் பெற்றாலும், வசூல் ரீதியாக எதிர்பார்த்த வரவேற்பினை பெறவில்லை. இந்தப் படம் வெளியீட்டிற்கு முன்பே, இதன் ஓடிடி உரிமையினை ஃநெட்ப்ளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியது. ஆனால், மாதங்கள் கடந்தும் வெளியாகாமல் உள்ளது. ஏனென்றால் பெரிய விலைக்கு இதன் ஓடிடி உரிமை விற்கப்பட்டது. இது தொடர்பாக விசாரித்தபோது, ‘தங்கலான்’ படத்தின் ஓடிடி-க்கான பதிப்பினை கொடுப்பதில் தாமதப்படுத்தி இருக்கிறது படக்குழு. இதனால் சொன்ன தேதியை விட்டு கடந்துவிட்டதால், இதனை வெளியிட முடியாது என கூறிவிட்டது ஓடிடி நிறுவனம். இது தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
முன்பு ஒப்புக் கொண்ட விலைக்கு இப்போது வெளியிட முடியாது எனவும், விலையைக் குறைத்தால் மட்டுமே வெளியிட முடியும் எனவும் படக்குழுவுக்கு நிபந்தனை விதித்திருக்கிறது ஓடிடி நிறுவனம். இது தொடர்பான பேச்சுவார்த்தை கடந்த சில வாரங்களாக நடைபெற்று வருகின்றன. விரைவில் இது நல்லபடியாக முடிந்தால் மட்டுமே, ‘தங்கலான்’ திரைப்படம் ஓடிடியில் வெளியாகும் ஃநெட்ப்ளிக்ஸ் நிறுவனம் பேச்சுவார்த்தை சுமுகமாக முடிவடையாத பட்சத்தில், இதர ஓடிடி நிறுவனங்களிடம் கொடுக்க படக்குழு முடிவு செய்திருக்கிறது.