×

மகாராஜா வெற்றி; இயக்குநர் நித்திலன் சுவாநிநாதனுக்கு BMW கார் பரிசு!
 

 

மகாராஜா திரைப்பட வெற்றியை முன்னிட்டு அப்படத்தின் தயாரிப்பாளர் சுதன் மற்றும் ஜெகதீஷ் பழனிச்சாமி ஆகியோர் இயக்குநர் நித்திலன் சுவாமிநாதனுக்கு BMW கார் பரிசாக வழங்கியுள்ளனர்.நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சாச்சனா, நட்டி, சிங்கம் புலி, அனிராக் காஷ்யப் உள்ளிட்ட பலர் நடித்த திரைப்படம் ‘மகாராஜா’. கடந்த ஜூன் மாதம் வெளியான மகாராஜா பெரும் வரவேற்பைப் பெற்றது. சாதாரண பழிவாங்கல் கதையை வித்தியாசமான திரைக்கதையுடன் கூறிய விதத்தில் நித்திலன் சுவாமிநாதன் வெற்றி பெற்றார். அனைத்து விதமான ஆடியன்ஸையும் கவர்ந்த மகாராஜா திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டை நடத்தியது. கிட்டதட்ட 20 கோடி ரூபாயில் எடுக்கப்பட்ட மகாராஜா திரைப்படம் 100 கோடிக்கு மேல் வசூல் செய்தது. தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் உலக அளவில் பல்வேறு நாடுகளில் மகாராஜா திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.


நெட்ஃபிளிக்ஸ் ஒடிடி தளத்தில் வெளியான மகாராஜா திரைப்படம், அதிகம் பேரால் பார்க்கப்பட்ட இந்திய திரைப்படம் என்ற சாதனையை படைத்தது. இந்நிலையில் மகாராஜா படக்குழு இயக்குநர் நித்திலன் சுவாமிநாதனுக்கு BMW கார் பரிசளித்து வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதுகுறித்து நித்திலன் சுவாமிநாதன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இந்த அழகான பரிசுக்கு தயாரிப்பாளர் சுதன் மற்றும் ஜெகதீஷ் பழனிச்சாமிக்கு நன்றி. இந்த வெற்றியை சாத்தியமாக்கிய அனைவருக்கும் நன்றி” என்று பதிவிட்டுள்ளார்.