நடிகர் டேனியல் பாலாஜி நடித்த கடைசி படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ்...!
நடிகர் டேனியல் பாலாஜி உயிருடன் இருந்தபோது நடித்த RPM படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.
கடந்த 2002-ம் ஆண்டு வெளியான ‘ஏப்ரல் மாதத்தில்’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் டேனியல் பாலாஜி. ‘வேட்டையாடு விளையாடு’, ‘பொல்லாதவன்’, ‘வட சென்னை’ என பல படங்களில் நடித்து ரசிகர்களிடையே கவனம் ஈர்த்தார். வில்லன் கதாபாத்திரங்களுக்கு கச்சிதமாக பொருந்துபவர்.
தமிழ் சினிமாவின் முக்கியமான நடிகராக வலம் வந்த டேனியல் பாலாஜி கடந்த ஆண்டு மார்ச் மாதம் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அவரது மறைவு திரையுலகினர் மற்றும் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் அவர் மறைந்து ஓராண்டு கழித்து அவர் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஆர்பிஎம்’ படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.
பிரசாத் பிரபாகர் இயக்கியுள்ள இந்தப் படத்தில் இளவரசு, தேவதர்ஷினி, கோவை சரளா, ஒய்.ஜி.மஹேந்திரன் உள்ளிட்ட பிரபல நடிகர்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு செபஸ்டியன் ரொசாரியோ இசையமைத்துள்ளார். வீடுகளை காலி செய்யும்போது கள்ளச்சாவி தயாரித்து திருடும் கும்பலை மையப்படுத்தி, திரில்லான வகையில் படம் தயாராகியுள்ளது. விறுவிறுப்பான இந்த ட்ரெய்லர் படம் மீதான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.