×

 போர் சூழல்... ராணுவ வீரர்களுக்காக இசையமைப்பாளர் இளையராஜா எடுத்த முடிவு...!

 

ராணுவ வீரர்களுக்காக இசையமைப்பாளர் இளையராஜா இசை நிகழ்ச்சி கட்டணத்தையும் ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு எனது சிறிய பங்களிப்பாக வழங்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.  


காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் கடந்த மாதம் 22ஆம் தேதி பயங்கரவாதக் கும்பல் சுற்றுலாப் பயணிகள் மீது கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில், 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தானின் 9 பயங்கரவாத முகாம்களை இந்திய ராணுவம் அழித்தது. இதற்கு பதில் தாக்குதல் தரும் விதமாக பாகிஸ்தான் இந்தியாவில் வான்வழித் தாக்குதல் நடத்த முயற்சித்தது. ஆனால் அதை அனைத்தையும் இந்தியா முறியடித்தது. இதனால் தொடர்ந்து இரு நாடுகளுக்கிடையே போர் பதற்ற சூழ்நிலை நீடித்து வருகிறது. 

இந்த நிலையில் இசையமைப்பாளர் மற்றும் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் இளையராஜா, ‘தேசிய பாதுகாப்பு நிதிக்கு’ தனது இசை நிகழ்ச்சி கட்டணத்தையும் ஒரு மாத சம்பளத்தையும் வழங்க முடிவு செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “இந்த ஆண்டின் தொடக்கத்தில், எனது முதல் சிம்பொனியை இசையமைத்து பதிவு செய்து அதற்கு ‘வேலியண்ட்’ என பெயரிட்டேன். ஆனால் மே மாதத்தில் நமது உண்மையான ஹீரோக்கள், அப்பாவி சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்ட பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக எல்லையில் துணிச்சலாக போராடி வருகின்றனர். அவர்களின் துணிச்சல் நிச்சயம் எதிரிகளை வீழ்த்தும்” எனக் குறிப்பிட்டு பாரதியின் தேசப்பற்று பாடலான “ஜய பேரிகை கொட்டடா, கொட்டடா, ஜய பேரிகை கொட்டடா” என்ற வரிகளை குறிப்பிட்டுள்ளார். 


மேலும் “ஒரு பெருமைமிக்க இந்தியனாகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும், எனது இசை நிகழ்ச்சி கட்டணத்தையும் ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு எனது சிறிய பங்களிப்பாக வழங்க முடிவு செய்துள்ளேன். இதை பயங்கரவாதத்தை ஒழிக்கவும், நமது எல்லைகளையும் மக்களையும் பாதுகாக்கவும் நாட்டின் துணிச்சலான ஹீரோக்களின் வேலியண்ட்(வீரம்) முயற்சிகளுக்காக செய்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக , “மன்னன் எவ்வழியோ, மக்கள் அவ்வழி” என எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார் என்பது நினைவுகூரத்தக்கது. இளையராஜா சமீபத்தில்  தனது  இசை  கச்சேரி  நிகழ்ச்சியைக் கரூரில் நடத்தி முடித்தார். அடுத்து வருகிற 17ஆம் தேதி கோவையில் கச்சேரி நடத்தவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.