“திருமணத்தில் ஏற்ற தாழ்வுகள் வரும், தவறுகள் நடக்கும்...” - குஷ்பு அறிவுரை
சினிமா மற்றும் அரசியல் என இரண்டு ட் துறைகளில் பயணம் செய்து வருபவர் குஷ்பு. சினிமாவில் கடைசியாக அவரது கணவர் சுந்தர்.சி இயக்கிய அரண்மனை 4 படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார். மேலும் இணை தயாரிப்பாளராகவும் இப்படத்தைத் தயாரித்திருந்தார். அரசியலில் தி.மு.க.வில் தொடங்கி, காங்கிரஸ் என தொடர்ந்து தற்போது பா.ஜ.க.வில் இருக்கிறார்.
இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் தொடர்ந்து அரசியல், சினிமா அப்டேட் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் தற்போது ஒரு குடும்பத் தலைவன் பற்றி நீண்ட பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், “ஒரு உண்மையான மனிதன் எல்லாவற்றுக்கும் மேலாக தன் குடும்பத்தை பார்க்கிறான். அவன் தனது தேவை, ஆசை, விருப்பம் மற்றும் சுதந்திரம் என அனைத்தையும் தன் குடும்பத்தின் முன் இரண்டாம் பட்சமாகத்தான் வைப்பான். வாழ்க்கையில் ஒவ்வொரு திருமணத்திலும் ஏற்ற தாழ்வுகள் வரும், தவறுகள் நடக்கும். ஆனால் இந்த தவறுகள் ஒரு மனிதனுக்கு அவன் பல ஆண்டுகளாக பாதுகாத்த வாழ்க்கையை கைவிடவைக்க தோன்றாது.
உறவுகளில் காதல் சில நேரங்கள் குறையலாம். ஆனால் மரியாதை குறையாமல் இருக்க வேண்டும். தன் குழந்தைகளை அன்போடு பார்த்துக் கொள்ளும் மனைவியை மதிப்பவன்தான் உண்மையான மனிதன். அப்படி நடந்து கொள்ளாதவன் சுயநலவாதி. இது போன்ற செயல் புரிதல் இல்லாமல் இருப்பதை பிரதிபலிக்கிறது. வாழ்க்கை என்பது ஒரு சுழற்சி. சுயநலத்தால் ஒருவர் செய்யும் செயல்கள் பூமராங் போல அவரையே திரும்பத் தாக்கும். அதை எல்லாம் தவறு என உணரும் தருனம் காலம் கடந்து போயிருக்கும். இதுதான் கசப்பான உண்மை. குழந்தையின் தாயை மதிக்க வேண்டும் என்பது அடிப்படை மரியாதை, இது இல்லாமல், ஒரு மனிதன் மற்றவர்களின் மரியாதையை பெறவோ அல்லது வாழ்க்கையில் வெற்றிபெறவோ முடியாது” என பல்வேறு விஷயங்களை குறிப்பிட்டுள்ளார். சமீபத்தில் ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியை பிரிவதாக கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.