×

சாய் பல்லவி என நினைத்து... ‘அமரன்’ செல்போன் நம்பரால் பரிதவிக்கும் இளைஞர்..!
 

 

சிவகார்த்திகேயனின் ‘அமரன்’ படத்தில் சென்னையைச் சேர்ந்த இளைஞர் ஒருவரின் செல்போன் நம்பர் இடம்பெற்றுள்ளது. இதனால் அவருக்கு தினந்தோறும் நூற்றுக்கணக்கான அழைப்புகள் வந்த வண்ணம் உள்ளன. இதைத் தடுக்க முடியாமல் தவிப்பதாக அவர் வேதனை தெரிவித்துள்ளார்.

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடித்துள்ள ‘அமரன்’ திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு கடந்த அக்டோபர் 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்தில் நடிகை சாய் பல்லவி, சிவகார்த்திகேயனுக்கு தனது தொலைபேசி எண்ணை பேப்பர் ஒன்றில் எழுதி கசக்கி அவரிடம் தூக்கி வீசுவார். அந்த தொலைபேசி எண் சரியாக தெரியவில்லை என்றாலும், அதனை எழுதி வைத்து, பல ரசிகர்களும் அந்த நம்பருக்கு அழைப்பு விடுத்துள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டது என்னவோ, அந்த நம்பருக்கு சொந்தக்காரரான சென்னையைச் சேர்ந்த வி.வி.வாகீசன் என்ற இளைஞர் தான்.

 
‘அமரன்’ படத்தில் இடம்பெற்ற தன்னுடைய செல்ஃபோன் நம்பரால் 100-க்கும் அதிகமான தொலைபேசி அழைப்புகள் வருவதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், படம் வெளியான தீபாவளியன்றே அவருக்கு அழைப்புகள் வரத் தொடங்கியுள்ளன. பலரும் தாங்கள் சாய் பல்லவியிடம் பேச வேண்டும், அவரது நடிப்பை பாராட்ட வேண்டும் என்று கேட்க, ஒரு கட்டத்தில் தனது போனை சைலண்ட் மோடுக்கு மாற்றியுள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், “தீபாவளிக்கு அடுத்த நாள் எழுந்து பார்த்தபோது, 100 மிஸ்டு கால்கள், பல வாய்ஸ் மெசேஜ்கள், இந்தியா மட்டுமல்ல வெளிநாடுகளிலிருந்தும் எனக்கு வந்திருந்தன. தொடர் போன்கால்கள் ஒருபுறம் இருக்க, படத்தின் முகுந்த் வரதராஜின் மனைவியான இந்து ரெபேக்கா வர்கீஸின் உண்மையான தொலைபேசி எண் இது தான் என்று நினைத்து பலரும் அழைப்பு விடுத்திருந்தனர். ஒரு கட்டத்தில் தொலைபேசி அழைப்புகளை எதிர்கொள்ள முடியாமல் படத்தின் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி மற்றும் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு சமூக வலைதள பக்கத்தில் மெசேஜ் அனுப்பினேன். ஆனால், அவர்கள் தரப்பிலிருந்து எந்த பதிலும் கிடைக்கவில்லை. 

தொடர் அழைப்புகளால் எனது செல்போனை சைலண்டில் வைத்துவிட்டேன். இதனால் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடமிருந்து வரும் அவசர அழைப்புகளை ஏற்க முடியாமல் போய்விடுமோ என்ற அச்சம் எனக்கு இருக்கிறது. இந்த எண்ணை 2 ஆண்டுகளாக பயன்படுத்தி வருகிறேன். என்னுடைய வங்கி கணக்கு உள்ளிட்ட பல விஷயங்களுக்கு இந்த எண்ணை கொடுத்திருப்பதால் இந்த நம்பரை விட்டுவிடவும் முடியாது” என்கிறார்.

மேலும், “என்னுடைய நம்பர் இன்ஸ்டாகிராம் ரீல்ஸிலும் இடம்பெற்றதால் அது இன்னும் ஏராளமானவர்களை சென்று சேர்ந்திருக்கிறது. இது தொடர்பாக ஏர்டெல் நிறுவனத்தை தொடர்பு கொண்டபோது, அழைப்புகளை ‘ப்ளாக்’ செய்ய முடியாது என கைவிரித்து விட்டனர்” என்கிறார் வேதனையுடன். குறிப்பாக அவர் இன்னும் ‘அமரன்’ படத்தை பார்க்கவில்லை, இன்ஸ்டா ரீல்ஸ் மூலமாகவே அவர் இதனை அறிந்துள்ளார்.