‘கூலி’ படத்தில் கேரக்டர்கள் இப்படித்தான் இருக்கும்.. லோகேஷின் வெற்றி ரகசியம் இதுதான்..! - நாகார்ஜுனா
லோகேஷ் கனகராஜ் படங்களில் தனித்துவமான கதாப்பாத்திரங்கள் இருப்பதாகவும், கூலி படத்தில் தனது கதாப்பாத்திரம் தனியாக நிற்கும் அளவிற்கு இருக்கும் என நடிகர் நாகார்ஜுனா தெரிவித்துள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘கூலி’. அனிரூத் இசையமைக்கும் இந்தப்படத்தில் பாலிவுட் நடிகர் அமீர்கான், நாகார்ஜுனா, சத்யராஜ், சௌபின் ஷாஹிர், பகத் பாசில், உபேந்திரா, ஸ்ருதி ஹாசன், ரெபா மோனிகா ஜான் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். லோகேஷ் சினிமேட்டிக் யூனிவர்ஸில் வெளியாக உள்ள அடுத்த படம் என்பதாலும், பெரிய நட்சத்திரங்கள் பலர் இருப்பதாலும் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறியிருக்கிறது. ‘கூலி’ திரைப்படம் ஆகஸ்ட் 14ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் லோகேஷ் கனகராஜின் படங்கள் வெற்றியடைவதற்கு அவரது தனித்துவமான காதாப்பாத்திரங்களின் படைப்பு தான் என நடிகர் நாகார்ஜுனா தெரிவித்துள்ளார். அண்மையில் நடத்த நேர்காணல் ஒன்றில் இதுகுறித்து பேசியிருக்கும் அவர், “லோகேஷ் கனகராஜின் முந்தைய படங்களைப் பாருங்கள். அனைத்திலும் சிறப்பான கதாப்பாத்திரங்கள் உள்ளன. எனக்கு மிகவும் பிடித்த விக்ரம் படத்தை எடுத்துக்கொள்ளுங்கள், அதில் பகத் பாசில், விஜய் சேதுபதியின் கேரக்டர்கள் எல்லாமே நன்றாக இருந்தன.
விக்ரம் படத்தில் வரும் வேலைக்காரப் பெண் டீனா காதாப்பாத்திரம் எப்படியிருந்தது பாருங்கள். அது எனக்கு மிகவும் பிடித்தது. இதுமாதிரியான சுவாரசியமான கதாப்பாத்திரங்கள் தான் லோகேஷின் வெற்றியின் ரகசியம். ‘கூலி’ படத்தில் ரஜினியை தவிர்த்துவிட்டு பார்த்தாலுமே உபேந்திரா, அமீர்கான் மற்றும் என்னுடைய கதாப்பாத்திரங்கள் தனியாக தெரியும் அளவிற்கு இருக்கும். இதுதான் இந்தப்படத்தின் கூடுதல் சிறப்பு.. ” என்று கூறியுள்ளார்.