‘துடரும்’ திரைப்படம் ஹிட் - நடிகர் மோகன்லால் நெகிழ்ச்சி
மலையாளத்தில் வெளியாகியுள்ள ‘துடரும்’ படத்துக்கு கிடைத்துள்ள வரவேற்பினால் மோகன்லால் மிகவும் நெகிழ்ச்சி அடைந்திருக்கிறார்.
மோகன்லால் நடிப்பில் வெளியான ‘எம்புரான்’ திரைப்படம் பல்வேறு சர்ச்சைகளை கடந்து வசூல் சாதனை புரிந்தது. இதனைத் தொடர்ந்து மோகன்லால் நடிப்பில் ‘துடரும்’ படம் வெளியிடப்பட்டது. பெரிதாக எந்தவொரு விளம்பரப்படுத்துதல் இல்லாமல் வெளியானது. முழுக்க கதையை நம்பி மட்டுமே படக்குழு வெளியிட்டது.
‘துடரும்’ படத்தின் முதல் காட்சி முடிந்தவுடனேயே, பலரும் இணையத்தில் கொண்டாடி தீர்த்தார்கள். இதனால் அடுத்தடுத்த காட்சிகளுக்கு டிக்கெட் முன்பதிவு எகிறியது. பல்வேறு மொழிகளிலும் இப்படத்தின் ரீமேக் உரிமையினை கைப்பற்ற இப்போதே பேச்சுவார்த்தையினை தொடங்கியிருக்கிறார்கள்.
‘துடரும்’ படத்துக்கு கிடைத்துள்ள பிரம்மாண்ட வரவேற்பு குறித்து மோகன்லால், “‘துடரும்’ படத்துக்கான அன்பு மற்றும் மனமார்ந்த பதிவுகளால் மிகவும் நெகிழ்ச்சியடைந்துள்ளேன். உண்மையிலேயே பணிவுடன் இருக்கிறேன். ஒவ்வொரு செய்தியும், ஒவ்வொரு பாராட்டு வார்த்தையும் என்னால் முழுமையாக வெளிப்படுத்த முடியாத வழிகளில் என்னைத் தொட்டுள்ளன.இந்தக் கதைக்கு உங்கள் இதயங்களைத் திறந்ததற்கும், அதன் ஆன்மாவைப் பார்த்ததற்கும், அதை இவ்வளவு கருணையுடன் ஏற்றுக்கொண்டதற்கும் நன்றி. இந்த நன்றியுணர்வு என்னுடையது மட்டுமல்ல. இந்தப் பயணத்தில் என்னுடன் பயணித்து, ஒவ்வொரு காட்சியிலும் தங்கள் அன்பையும், முயற்சியையும், உணர்வையும் அளித்த ஒவ்வொருவருக்கும் இது சொந்தமானது.