×

‘கங்குவா’ உடன் வெளியாகும் ‘வா வாத்தியார்’ டீசர்!

 

‘கங்குவா’ படத்துடன் ‘வா வாத்தியார்’ டீசரை வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது.நவம்பர் 14-ம் தேதி சூர்யா நடித்துள்ள ‘கங்குவா’ வெளியாக இருக்கிறது. பல்வேறு மொழிகளில் வெளியாகவுள்ள இப்படத்தை சூர்யா விளம்பரப்படுத்தி வருகிறார். இப்படத்துடன் கார்த்தி நடித்து உருவாகி வரும் ‘வா வாத்தியார்’ டீசரை வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது. ‘கங்குவா’ மற்றும் ‘வா வாத்தியார்’ படங்களின் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தான் என்பது குறிப்பிடத்தக்கது. 1 நிமிடம் 38 விநாடிகள் அளவுக்கு ‘வா வாத்தியார்’ டீசர் உருவாக்கப்பட்டுள்ளது. பெரும் பொருட்செலவில் நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருக்கும் இப்படத்தின் டீசர் வெளியாக இருப்பதால் படக்குழுவினர் பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். 

நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி, கீர்த்தி ஷெட்ட், சத்யராஜ், ராஜ்கிரண் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘வா வாத்தியார்’. சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வரும் இப்படத்தை அடுத்த ஆண்டு பிப்ரவரியில் வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது. ’கங்குவா’ வெளியாகும் திரையரங்குகளுக்கு, ‘வா வாத்தியார்’ படத்தின் விளம்பர பலகைகள் அனுப்பப்பட்டுள்ளது. அதில் பிப்ரவரி 2025 வெளியீடு என இடம்பெற்றுள்ளது. இதன் மூலமே வெளியீட்டு தேதி உறுதியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.