×

'வாழ்வு தொடங்குமிடம் நீதானே' திரைப்படம் நாளை வெளியீடு

 

நடிகைகள் ஸ்ருதி பெரியசாமி மற்றும் நிரஞ்சனா நெய்தியார் கதையின் நாயகிகளாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் திரைப்படம் 'வாழ்வு தொடங்குமிடம் நீதானே'. ஜெயராஜ் பழனி இயக்கியிருக்கும் இத்திரைப்படம், ஷார்ட் ஃபிளிக்ஸ் எனும் செயலி மற்றும் டிஜிட்டல் தளத்தில் நாளை வெளியாகிறது. 

இத்திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதன் போது ஷார்ட் ஃபிளிக்ஸ் எனும் டிஜிட்டல் தளத்தின் நிறுவனர்கள் பரணிதரன் மற்றும் செந்தில்குமார், நடிகர் அர்ஷத், நடிகைகள் ஸ்ருதி பெரியசாமி, நிரஞ்சனா நெய்தியார், படத்தின் இயக்குநர் ஜெயராஜ் பழனி, பாடலாசிரியர்கள் ஜி கே பி மற்றும் சிவா சங்கர், இசையமைப்பாளர் தர்ஷன் குமார், தயாரிப்பாளர் நீலிமா இசை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

இந்நிகழ்வில் ஷார்ட் ஃபிளிக்ஸ் பரணிதரன் பேசுகையில், '' வாழ்வு தொடங்கும் இடம் நீதானே இந்த திரைப்படம் எங்களுடைய டிஜிட்டல் தளத்தில் வெளியாகிறது. இந்த கதையை இயல்பாக சிந்திக்காமல் வித்தியாசமாக சிந்தித்து உருவாக்கியிருந்தார். அதன் பிறகு இப்படத்தின் தயாரிப்பு பணிகளுக்காக நடிகை நீலிமா இசையை தொடர்பு கொண்டோம். அவர்கள் இந்தப் படத்தை மிக நேர்த்தியாக உருவாக்கி இருக்கிறார்கள். தன் பாலின சேர்க்கையாளர்களை பற்றிய இந்தத் திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் பிடிக்கும் என்று நம்புகிறோம்'' என்றார். 

தயாரிப்பாளரும், நடிகையுமான நீலிமா இசை பேசுகையில், '' இந்தத் திரைப்படம் மைக்ரோ பட்ஜெட்டில் உருவானது. 'அரண்மனைக்கிளி' எனும் தொலைக்காட்சி தொடரில் பணியாற்றிக் கொண்டிருந்த போது நண்பர் ஒருவர் மூலமாக ஷார்ட் ஃபிளிக்ஸ் நிறுவனத்தை சேர்ந்த பரணிதரன் மற்றும் செந்தில்குமார் அறிமுகமானார்கள். ஷார்ட் ஃபிலிக்ஸ் எனும் ஆப்ஸை ஏன் அனைவரும் பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்றால், இந்த செயலியில் புது முகங்களுக்கு வாய்ப்பளித்திருக்கிறார்கள். புது இயக்குநர்கள், புதிய நடிகர்கள், புதிய தொழில்நுட்ப கலைஞர்கள் என ஏராளமானவருக்கு வாய்ப்பளித்திருக்கிறார்கள். இந்த மேடையில் அமைந்திருக்கும் பெரும்பாலானவர்கள் புது முகங்களே. இந்த செயலியை நாம் எப்போது வேண்டுமானாலும்... எங்கு வேண்டுமானாலும்.. பதிவிறக்கம் செய்து நாம் விரும்பக்கூடிய கால அளவுகளில் படைப்புகளை காணலாம். 
இது போன்ற நல்ல படைப்பிற்கு ரசிகர்களும் பேராதரவு வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்'' என்றார்.