ஹேமா கமிட்டி விவகாரம் குறித்து வைரமுத்து கோரிக்கை
கேரளாவில் 2017ஆம் ஆண்டு பிரபல நடிகை ஒருவர் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளானதை தொடர்ந்து மலையாள சினிமா துறையில் பணிபுரியும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி ஹேமா தலைமையில் ஒரு கமிட்டி அமைக்கப்பட்டது. இந்த கமிட்டி ஒரு வருட விசாரணைக்குப் பிறகு அம்மாநில முதல்வரிடம் ஆய்வறிக்கையை தாக்கல் செய்தது. ஆனால் அந்த ஆய்வறிக்கை பொதுவெளியில் வெளியிடப்படாமல் இருந்த நிலையில், தகவல் உரிமை ஆணையத்தின் தலையீட்டால் சமீபத்தில் சில பக்கங்கள் வெளியாகி இந்தியத் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து நடிகைகள் பலரும் தங்களுக்கு நடந்த பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து பொது வெளியில் பேசத் தொடங்கினர். இந்த புகார்கள் குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. மேலும் பொதுவெளியில் புகார் கூறிய நடிகைகளிடம் நேரில் விசாரித்து வாக்கு மூலம் பெற்று சம்பந்தப்பட்ட நடிகர்கள், இயக்குநர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரித்து வருகிறது சிறப்பு புலனாய்வு குழு அமைப்பு. இந்த விவகாரம் பெரும் அதிர்வலையை இந்திய திரையுலகில் ஏற்படுத்த தமிழ் திரையுலகிலும் பாலியல் துன்புறுத்தல் குறித்து விசாரிக்க நடிகை ரோகிணி தலைமையில் ஒரு கமிட்டி அமைக்கப்பட்டு விசாரணை தொடங்கியுள்ளது. ஆனால் தமிழ் முன்னணி நடிகர்கள் ரஜினி, கார்த்தி, அர்ஜுன் என பலரும் ஹேமா கமிட்டி விவகாரம் தொடர்பாக பட்டும் படாமல் பதிலளித்திருந்தனர். மேலும் விஷால் தமிழ் திரையுலகில் பாலியல் புகார் நடிகர் சங்கத்துக்கு வந்தால் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் ஹேமா கமிட்டி விவகாரம் குறித்து கவிஞர் வைரமுத்து பேசியுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி மறைவையொட்டி சென்னை தி.நகரில் வைக்கப்பட்டுள்ள அவரது உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்திய பின் செய்தியாளர்களை சந்தித்த வைரமுத்து, ஹேமா கமிட்டி தொடர்பான கேள்விக்கு, “இது முக்கியமான கருத்து. இந்த ஹேமா கமிட்டி என்பது எல்லா மாநிலங்களிலும், முக்கியமான துறைகளில் அமைக்கப் பட வேண்டிய ஒரு அமைப்பு. திரைத்துறைகளில் மட்டுமல்ல, நாட்டில் எல்லா துறைகளிலும் பெண்கள் பாதுகாப்பை நாடுகிறார்கள். பெண்கள் சுரண்டப்படுகிறார்கள். அவர்கள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கப்படுகிறார்கள். அதிலிருந்து முற்றும் விடுபட வேண்டும் என்றால், பெண்மையில் இருக்கிற பெண்மை என்ற ஒரு கருத்தை நீங்கள் நீக்கி விட வேண்டும். ஆணுக்கு ஆண்மை என்று இருப்பதும், பெண்ணுக்கு பெண்மை என பிரிக்கப்படுவதும், நாட்டில் பேதங்களை ஏற்படுத்துகிற மதீப்பிடுகள் என்று கருதுகிறேன்.
ஆணும் சரி சமம் தான். பெண்ணும் சரி சமம் தான். இதில் யாரும் யாரையும் துன்புறுத்துவது என்பது ஒரு பாலினம் பலவீனமானது என்று காட்டுவதற்கான ஒரு வலியாக இருக்கிறது. பெண் இனம் பலவீனமான பாலினம் அல்ல. இந்திய பள்ளிக் கல்வித் துறைக்கு ஒரு கோரிக்கை, பெண்களுக்கு கூடுதல் பாதுகாப்பிற்கான பயிற்சியை கல்வி திட்டத்தில் சேருங்கள். பெண்களுக்கு விளையாட்டு பயிற்சி மட்டும் போதது. எழுத்து பயிற்சி மட்டும் போதாது. பெண் குழந்தைகளுக்கு தங்களை தாங்களே காத்து கொள்கிற உடல் வலிமையை ஊட்ட செய்ய வேண்டும். அவர்களுக்கு பயிற்சி தர வேண்டும். இது புதிய இந்தியாவை எழுதுவதற்கான தொடக்கமாக இந்த ஹேமா கமிட்டியை நான் பார்க்கிறேன்” என்றார்.