×

“என்னை மிகவும் பாதித்தது” - யோகிபாபு உருக்கம்

 

மாரி செல்வராஜ் தனது வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்களை மையக்கருவாக வைத்து இயக்கியிருக்கும் திரைப்படம் வாழை. இப்படத்தை மாரி செல்வராஜும் அவரது மனைவி திவ்யாவும் இணைந்து தயாரித்திருக்கின்றனர். இப்படத்தில் இரண்டு சிறுவர்கள் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருக்க அவர்களுடன் இணைந்து கலையரசன், நிகிலா விமல், திவ்யா துரைசாமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் மற்றும் நவ்வி ஸ்டூடியோஸ் இணைந்து வழங்கியுள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்திருந்தார். இப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 

இப்படத்தினை பார்த்து திருமாவளவன் எம்.பி., சீமான், ராமகிருஷ்ணன் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் வெற்றி மாறன், பா.ரஞ்சித், ராம், நெல்சன், தனுஷ், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பல திரைத்துறை பிரபலங்களும் பாராட்டினர். இதனிடையே மாரி செல்வராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் வாழை படத்தை பாராட்டி வரும் பிரபலங்களின் வீடியோவை பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் ஜிப்ரான், கொட்டுக்காளி இயக்குநர் வினோத் ஆகியவர்கள் பாராட்டியதை பகிர்ந்திருந்தார். இந்த நிலையில் மகாராஜா பட இயக்குநர் நித்திலன் சாமிநாதன் மற்றும் யோகி பாபு ஆகியோர் பாராட்டிய வீடியோவை தற்போது பகிர்ந்துள்ளார்.   

நித்திலன் சாமிநாதன் பேசிய வீடியோவில், “இப்போதுதான் வாழை படம் பார்த்துவிட்டு வருகிறேன். படம் பார்த்துவிட்டு எல்லோரும் அமைதியாக இருந்தார்கள். படம் பார்த்து வாயடைத்துப் போவார்கள் என்பது இதுதான் போல, அந்த அளவிற்கு படத்தின் கதை தாக்கத்தை ஏற்படுத்தியது. படத்தில் காட்டிய விவரங்கள், வாழ்வியல் என அனைத்தும் சரியான முறையில் காட்சிப்படுத்தியுள்ளனர். என்னுடைய அன்றாட வாழ்க்கையில் பார்க்காததை இந்த படத்தில் பார்த்திருக்கிறேன். கிராமத்தில் வாழும் அடித்தட்டு மக்களின் பிரதிபலிப்பாக இந்த படம் இருக்கிறது. டெக்னிக்கலாக இசை, ஒலிப்பதிவு, ஒளிப்பதிவு என அனைத்தும் படத்தில் கச்சிதமாகப் பொருந்தியிருக்கிறது. கண்டிப்பாக சொல்கிறேன் மாரியின் சிறந்த படம் என்றால் அது வாழைதான்” என்றார். 

இதையடுத்து யோகி பாபு பேசிய வீடியோவில், “இந்த படம் என்னை மிகவும் பாதித்தது, கண்டிப்பாக எல்லோருடைய வாழ்க்கையிலும் வாழை இருக்கும். மாரி செல்வராஜுடன் இணைந்து பரியேறும் பெருமாள், கர்ணன் ஆகிய படங்களில் பணியாற்றியுள்ளேன். பரியேறும் பெருமாள் படம் பண்ணும் போதுதான் மாரி செல்வராஜ் வாழ்க்கையில் நிறைய பிரச்சினைகள் இருந்தது தெரிய வந்தது. ஆனால், இந்த அளவிற்கு சோகமும் வலியும் அவருக்கு இருக்கும் என்று என்னிடம் சொன்னதே கிடையாது. `வாழை' படத்தை மிகவும் அற்புதமாக இயக்கியுள்ளார்” என்று உருக்கமுடன் பாராட்டியுள்ளார்.