×

‘தி கோட்’  விஜயகாந்த் லுக் சீக்ரெட்டை பகிர்ந்த வெங்கட் பிரபு! 

 


வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’.  ஏ.ஜி.எஸ் நிறுவனம் சார்பில் அர்ச்சனா கல்பாத்தி தயாரிக்க யுவன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, சினேகா, லைலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மேலும் இப்படத்தில் விஜய் டி.ஏஜிங் தோற்றத்திலும், ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் மறைந்த விஜயகாந்தையும் நடிக்க வைத்துள்ளனர். இது தொடர்பாக சமீபத்தில் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயயகாந்த்தை சந்தித்து படக்குழு நன்றி தெரிவித்தனர்.  

இப்படம் யு.ஏ தணிக்கை சான்றிதழ் பெற்று வருகிற செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படக்குழு ஹைதரபாத்தில் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடத்தியது. அந்நிகழ்வில் அர்ச்சனா கல்பாத்தி, வெங்கட் பிரபு, யுவன், பிரசாந்த், சினேகா, லைலா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். அப்போது செய்தியாளர்கள், ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் விஜயகாந்தை மீள் உருவாக்கம் செய்தது எப்படி என்று கேள்வி எழுப்பினர். 

அதற்கு வெங்கட் பிரபு பதிலளித்த போது ஏ.ஐ.தொழிநுட்பத்தின் மூலம் விஜயகாந்த்தை உருவாக்கிய வி.எஃப்.எக்ஸ் குழுவினருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன், ஏ.ஐ. தொழிநுட்பம் பெரிய விஷயமில்லை, ஏ.ஐ. மூலம் உருவாக்கப்படவுள்ளவரின் நிறைய டேட்டாக்களை இன்புட் செய்ய வேண்டும். நடிகர் என்.டி.ஆரை திரும்பவும் காட்சிப்படுத்த வேண்டுமென்றால் அவரின் முகத் தோற்றம் தொடர்பான அனைத்து டேட்டாக்களையும் இன்புட் செய்த பிறகு எந்த வயதில் வேண்டும் என்றாலும் ஏ.ஐ. உருவாக்கித் தரும் என்றார். 

மேலும் ‘கேப்டன் பிரபாகரன்’ பட விஜயகாந்தின் டேட்டாக்களை ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் பயன்படுத்தியதாகவும் விஜய்க்கு டி ஏஜிங் செய்யும்போது அவர் அம்மாவிடம் இருந்து விஜய்யின் பழைய புகைப்படங்களை டேட்டாவாக பயன்படுத்தியதாகவும் தெரிவித்தார். இளமையாக விஜய்யை காண்பிக்க வேறு ஒரு பையனை நடிக்க வைத்தோம், அப்படிதான் டி.ஏஜிங் விஜய் லுக் வடிவமைத்தோம் என்றார். டெக்னாலஜி நிறைந்த உலகத்தில் நாம் இருப்பதால் எல்லாமே சாத்தியம்தான். ஆனால், அதே சமயம் அது அச்சுறுத்தக் கூடியதாகவும் இருக்கிறது என்று கூறினார்.