20 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள சென்னை 600028’ -வெங்கட் பிரபு என்ன சொல்கிறார் தெரியுமா ?
நடிகராகவும், பாடகராகவும் தமிழ் திரையுலகில் வெற்றிபெறாத நிலையில், திடீரென்று ‘சென்னை 600028’ என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர், வெங்கட் பிரபு. தொடர்ந்து `சரோஜா’, `கோவா’, `மங்காத்தா’, `பிரியாணி’, `மாநாடு’, ‘தி கோட்’ போன்ற வித்தியாசமான படங்களை இயக்கினார். அவரது ‘சென்னை 600028’ என்ற படம் திரைக்கு வந்து 20 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இதுகுறித்து வெங்கட் பிரபு கூறுகையில், ‘20 வருடங்களுக்கு முன்பு ‘சென்னை 600028’ என்ற படத்தின் இயக்குனராக எனது பயணம் தொடங்கியது.
எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.பி.பி.சரண் ஆகியோர் என்மீது வைத்த அதீத நம்பிக்கைதான் என் வாழ்க்கையை மாற்றியது. ஒருமுறை செய்ததை மீண்டும் செய்யக்கூடாது என்பதில் நான் தீர்மானமாக இருக்கிறேன். ஒவ்வொரு படமும் ஒரு புதிய வகை, புதிய கதை சொல்லும் பாணி மற்றும் ஒரு புதிய சவாலை எதிர்கொள்வதற்கான வாய்ப்பாக அமைந்தது. சில முயற்சிகளுக்கு உடனடியாக அன்பும், வரவேற்பும் கிடைத்தது. படங்கள் காலப்போக்கில் ரசிக்கப்பட்டன. சில படங்கள் நல்ல பாடங்களை கற்றுக்கொடுத்தன.
புதிய முயற்சிகளில் ஈடுபடுவதற்கான தைரியம் எனக்கு கிடைத்திருக்கிறது என்றால், அதற்கு இத்தனை ஆண்டுகளாக ரசிகர்கள் என்மீது செலுத்தி வரும் அளவற்ற அன்பும், நம்பிக்கையும்தான் காரணம். எனது வெற்றிகளை கொண்டாடி இருக்கிறீர்கள். கடினமான சில காலக்கட்டங்களில் எனக்கு பக்கபலமாக நின்றிருக்கிறீர்கள். இன்றும் நான் திரையுலகின் தீவிர ரசிகனாகவே உணர்கிறேன். இருபது ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய அதே தீவிரமான ஆர்வத்துடன், உங்களுக்கு நல்ல கதைகளை வழங்குவேன் என்று உறுதியளிக்கிறேன். இன்னும் பல ஆண்டுகள் இணைந்து பயணிப்போம்’ என்றார்.