×

‘வேட்டையன்’ 2-ம் பாகம்: தா.செ.ஞானவேல் எண்ணம்
 

 

‘வேட்டையன்’ படத்தின் 2-ம் பாகம் எப்படியிருக்கும் என்பதை தா.செ.ஞானவேல் தெரிவித்துள்ளார்.
தா.செ.ஞானவேல் இயக்கத்தில் அமிதாப் பச்சன், ரஜினி, ஃபகத் பாசில், மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங், அபிராமி, ரக்ஷன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘வேட்டையன்’. லைகா நிறுவனம் தயாரித்த இந்தப் படம் அக்டோபர் 10-ம் தேதி வெளியானது. விமர்சன ரீதியாக வரவேற்பைப் பெற்றாலும், வசூல் ரீதியாக எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை.

 தமிழகத்தில் மட்டுமே இந்த நிலை என்று வர்த்தக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். கேரளா மற்றும் கர்நாடகாவில் விநியோகஸ்தர்களுக்கு நல்ல லாபம் கொடுத்துள்ளது ‘வேட்டையன்’. தற்போது தெலுங்கில் விளம்பரப்படுத்த இயக்குநர் தா.செ.ஞானவேல் பேட்டியளித்து வருகிறார்.

அதில் ‘வேட்டையன்’ 2-ம் பாகம் திட்டம் குறித்து பேசியிருக்கிறார், “வேட்டையன் படத்தின் 2-ம் பாகம் முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இருக்காது. முன்கதையாக திட்டமிட்டால் நன்றாக இருக்கும். அதியன் எப்படி என்கவுன்ட்டர் அதிகாரியாக உருவானார். ஃபகத் பாசில் திருடனாக இருந்து எப்படி காவல்துறைக்கு உதவி செய்பவராக மாறினார் உள்ளிட்டவற்றை வைத்து ‘வேட்டையன் 2; பண்ணலாம்” என்று தெரிவித்துள்ளார் தா.செ.ஞானவேல்.’வேட்டையன்’ படத்துக்குப் பிறகு இந்தி படமொன்றை இயக்கவுள்ளார் தா.செ.ஞானவேல். சரவணபவன் உரிமையாளர் ராஜகோபால் வாழ்க்கை வரலாற்றை பின்னணியாக கொண்டு இந்தப் படம் உருவாகிறது. இதற்கு ‘தோசா கிங்’ என்று பெயரிட்டுள்ளனர்.