×

விடுதலை 2 ரிலீஸ் :  ‘அடுத்த தளபதி’ என சூரியை பார்த்து கோஷமிட்ட ரசிகர்கள் 

 

விடுதலை படத்தின் முதல் பாக வெற்றிக்குப் பிறகு வெற்றி மாறன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘விடுதலை பாகம் 2’. எல்ரெட் குமார் தயாரித்துள்ள இப்படத்தில் விஜய் சேதுபதி, சூரி, மஞ்சு வாரியர், பிரகாஷ் ராஜ், அனுராக் காஷ்யப், கென் கருணாஸ், விஜய் சேதுபதியின் மகன் சூர்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இளையராஜா இசையமைத்துள்ள இப்படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று(20.12.2024) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் விடுதலை 2 படம் குறித்து சூரி பேசியுள்ளார். தான் கதாநாயகனாக நடிக்கும் மாமன் படத்தின் படப்பிடிப்பிற்காக திருச்சி சென்றுள்ள சூரி, விடுதலை 2 படம் பார்க்க அங்குள்ள திரையரங்கம் ஒன்றிற்கு சென்றுள்ளார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “விடுதலை படத்தின் முதல் பாகம் எல்லோருக்கும் பிடித்த வெற்றிப் படமாகவும் அமைந்தது. அதேபோல் விடுதலை படத்தின் இரண்டாம் பாகம் மக்களுக்கு பிடித்த வகையில் திருப்திகரமாக இருக்கும் என நினைக்கிறேன். வாழ்க்கைக்கு நெருக்கமாகவும் ரியலாகவும் படம் இருப்பதால் அனைவராலும் படத்துடன் தொடர்புப்படுத்திக்கொள்ள முடியும் என்பதை நான் நம்புகிறேன்.

இந்த படத்தில் கமர்ஷியலான விஷயங்களைத் தாண்டி மக்கள் தெரிந்துகொள்ளக்கூடிய அரசியல் இருக்கிறது. படம் பார்ப்பவர்களுக்கு வலிகள் நிறைந்த படமாக அமையும் என நினைக்கிறேன்” எனப் பேசினார். அப்போது  குறுக்கிட்ட ரசிகர்கள், ‘அடுத்த தளபதி, அடுத்த சூப்பர் ஸ்டார்...’ என கோஷமிட்டனர். அதற்கு சூரி “ஏய்...” என கையெடுத்துக் கும்பிட்டு “உங்களில் ஒருவனாக இருப்பது தான் நல்லது” என சிரித்தபடி பதிலளித்தார்.