×

அஜித் படம் கைவிடப்பட்டது குறித்து மனம் திறந்த விக்னேஷ் சிவன்...!

 

“நடிகர் அஜித்துக்காக நான் எழுதிய ஸ்கிரிப்ட் கிட்டத்தட்ட ‘ஆவேஷம்’ படத்தை போன்றது. ஆனால், அதனை தயாரிப்பாளர்கள் ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டனர்” என இயக்குநர் விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் அளித்த பேட்டி ஒன்றில், “அஜித்துக்கு ‘நானும் ரவுடி தான்’ படம் மிகவும் பிடித்திருந்தது. அவரை நான் சந்தித்தபோது, ‘நான் நிறைய படங்களை பார்ப்பதில்லை. ஆனால் ‘நானும் ரவுடிதான்’ படத்தை நிறைய முறை பார்த்திருக்கிறேன். குறிப்பாக பார்த்திபன் கதாபாத்திரம் நன்றாக இருந்தது. அப்படியான ஒரு கதாபாத்திரத்தை வைத்து ஒரு ஸ்கிரிப்டை கொண்டு வாருங்கள் நாம் படம் பண்ணுவோம்’ என்றார். பின்னர் சொன்னபடியே ஒருநாள் அவர் என்னை தொடர்பு கொண்டு உங்கள் ஸ்டைலில் ஒரு படம் பண்ணலாம் என்றார்.


இது ஒரு பகுதி என்றால், மறுபுறம் படத்தின் தயாரிப்பாளர்கள் முற்றிலுமாக வேறு மாதிரி யோசித்தார்கள். அவர்களுக்கென்று தனியே விதிகள் உண்டு. ஒரு பெரிய ஹீரோவை வைத்து படம் இயக்கும்போது இதெல்லாம் இருக்க வேண்டும் என விதிகளை வைத்திருந்தனர். எனக்கு அது எதுவும் புரியவில்லை. நான் எழுத ஆரம்பிக்கும்போதே இப்படியெல்லாம் இருக்கக் கூடாது என்பதை மாற்றியமைத்துதான் எழுதுவேன்.

உதாரணமாக, சொல்லப்போனால் என்னுடைய ஸ்கிரிப்ட் கிட்டத்தட்ட ‘ஆவேஷம்’ படத்தை போன்றது. நானும் பல மாஸ் தருணங்களை வைத்து தான் அந்த படத்தின் ஸ்கிரிப்டை எழுதினேன். அதை நான் தயாரிப்பாளர்களிடம் சொன்னபோது, அவர்கள், ‘என்ன ரொம்ப காமெடியா இருக்கு’ என சொன்னார்கள். எமோஷனலோ, கருத்தோ இல்லை என்றார்கள். இது தான் பிரச்சினை” என தெரிவித்துள்ளார். ‘துணிவு’ படத்தை முடித்து நடிகர் அஜித்தை விக்னேஷ் சிவன் இயக்குவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், அந்தப் படம் கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.