×

"தி கோட்" பட ப்ரோமோஷனுக்கு கட்சிப் பெயரை பயன்படுத்த கூடாது என விஜய் உத்தரவு? 

 

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் 'தி கோட்' படத்தின் ப்ரோமோஷனுக்காக கட்சிப் பெயரை பயன்படுத்தக்கூடாது என விஜய் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவராக வலம் வருபவர் விஜய். இவர் தற்போது இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் 'தி கோட்' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதில், மீனாட்சி சவுத்ரி விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார். மேலும் பிரபுதேவா, பிரசாந்த், அஜ்மல், சினேகா, யோகி பாபு, பிரேம்ஜி, ஜெயராம் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ள இப்படம் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், படத்தின் எடிட்டிங் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் முதல் பாடலான விசில் போடு மற்றும் இரண்டாவது பாடலான சின்ன சின்ன கண்கள் வெளியாகி ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்றிருந்த நிலையில், மூன்றாவது பாடலான ஸ்பார்க் கடந்த ஆக 3ஆம் தேதியன்று வெளியிடப்பட்டு ரசிகர்கள் மத்தியில் வரவேற்ப்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் தனது கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கு படத்தின் ப்ரோமோஷன் வேலைகளில் கட்சியின் பெயரை பயன்படுத்தக்கூடாது என விஜய் அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த வகையில், ஆட்டோகளில் பட ப்ரோமோஷனுக்காக ஒட்டப்படும் புதிய போஸ்டர்களில் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியின் பெயரை பயன்படுத்தாமல் அதற்கு முன்பு இருந்த இயக்க பெயரான விஜய் மக்கள் இயக்கம் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது.

அரசியல் கட்சி ஆரம்பித்த பிறகும் தான் நடித்து வரும் படங்களின் ப்ரோமோஷனுக்காக கட்சி பெயரை பயன்படுத்தாமல் சினிமாவை சினிமாவாகவே பார்க்கிறார் என ஒருபுறமும், கட்சிப் பெயரை பயன்படுத்தினால் மாற்றுக் கட்சியை சார்ந்த ரசிகர்கள் படத்தை தவிர்த்து விடுவார்கள். அதனால் இந்த யுக்தியை நடிகர் விஜய் கையாளுகிறார் என ஒருபுறமும் சமூக வலைத்தளங்களில் பேசி வருகின்றனர்.