×

விஜய் ஆண்டனியின் கோரிக்கை; மேடையிலேயே நிறைவேற்றிய கெளதம் மேனன்

 

‘மழை பிடிக்காத மனிதன்’ படத்திற்கு பிறகு விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஹிட்லர்’. இப்படத்தை செந்தூர் இன்டர்நேஷனல் நிறுவன தயாரிப்பில் தனா இயக்கியுள்ளார். இப்படத்தில் ரியா சுமன் நாயகியாக நடித்திருக்க கெளதம் மேனன், சரண்ராஜ், ரெடின் கிங்ஸ்லி, விவேக் பிரசன்னா, ஆடுகளம் நரேன், தமிழ், ஐஸ்வர்யா தத்தா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். முன்னதாக இப்படத்தின் டீசர் வெளியாகி கவனத்தை பெற்றதையடுத்து படம் வருகிற செப்டம்பர் 27ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா 16.09.2024 நடைபெற்றது. இதில் விஜய் ஆண்டனி, கெளதம் மேனன், ரியா சுமன், ஐஸ்வர்யா தத்தா உள்ளிட்ட படக்குழுவினர் பலர் பங்கேற்றனர். 

இந்நிகழ்வின்போது விஜய் ஆண்டனி மற்றும் கெளதம் மேனன் ஆகியோர் மேடையில் மாறி மாறி ரொமான்ஸ் காட்சிகளில் நடிப்பது எப்படி என தங்களின் ஸ்டைலில் ஒருவருக்கொருவர் கற்றுக்கொடுத்தனர். முதலில் விஜய் ஆண்டனி, “நானும் மாங்கு மாங்குனு ரொமான்ஸ் காட்சியில் நடிக்க முயற்சி பண்ணியிருக்கேன். ஆனால், மக்கள் அதை ஏற்று கொள்ளவில்லை, அதனால் எதாவது டிப்ஸ் கொடுங்கள்” என்று  கெளதம் மேனனிடம் கேட்டார். அதற்கு பதிலளித்த கெளதம் மேனன், “நம்ம இருவரும் சேர்ந்து ஒரு படம் பண்ணுவோம்” என்றார். அதன் பிறகு இருவரும் ‘ஹிட்லர்’ படத்தில் நடித்த ரியா சுமன் மற்றும் ஐஸ்வர்யா தத்தா ஆகியோருடன் ரோமான்ஸாக நடித்து காட்டினார்கள். இது அங்கு சிரிப்பலையை ஏற்படுத்தியது. 

அதன் பிறகு பத்திரிக்கையாளர் ஒருவர், “விஜய்யின் மாநாட்டில் கலந்துகொள்வீர்களா?” என்று கேள்வி எழுப்பினார். அதற்கு விஜய் ஆண்டனி, “விஜய் என் நண்பர்தான், அதனால் என்னை அழைத்தால் கலந்துகொள்வேன்” என நகைச்சுவையாக பதிலளித்தார். அதன் பின்பு திரைப்படங்களுக்கு வரும் விமர்சனங்கள் குறித்து விஜய் ஆண்டனி பேசுகையில், “விமர்சனமாக இருக்காமல் ஒருவருக்கொருவர் ஆதரவு தெரிவிக்கும் வகையில் கருத்து பகிர்வாக இருக்க வேண்டும்” என்றார். அதன் பின்பு பத்திரிக்கையாளர் ஒருவர், “இதுபோல மேடையில் நகைச்சுவையாக பண்ணுவதற்கு என்ன காரணம்” என்று கேட்க, அதற்கு விஜய் ஆண்டனி, “என்னை நம்பிய தயாரிப்பாளர், இயக்குநர், என்னுடன் நடித்த நடிகைகளின் வெற்றி தேவைப்படுகிறது. அதனால் புரமோஷனுக்காக மேடையில் குட்டிக்கரணம்கூட அடிப்பேன்” என்று கூறினார்.