×

‘தி கோட்’ பட கொண்டாட்டம் - ரசிகர்களுக்கு பிரியாணி விருந்து

 

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’. இப்படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, சினேகா, லைலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏ.ஜி.எஸ் நிறுவனம் சார்பில் அர்ச்சனா கல்பாத்தி தயாரித்திருக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தில் விஜய் டி.ஏஜிங் தோற்றத்திலும், ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் மறைந்த விஜயகாந்த்தையும் நடிக்க வைத்துள்ளனர். மேலும் மறைந்த பாடகி பவதாரணியின் குரலை ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் ஒரு பாடலுக்கு பயன்படுத்தி பாடவைத்துள்ளனர். 

அரசியல் வருகைக்கு பிறகு விஜய் நடிப்பில் வெளியாகும் முதல் படமாக இப்படம் இருப்பதால் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், இன்று (05.09.2024) பிரம்மாண்டமாக வெளியாகியுள்ளது. தமிழகம் முழுவதும் காலை 9 மணிக்கு சிறப்பு காட்சியுடன் முதல் காட்சி தொடங்கியது. மொத்தம் 750 திரையரங்குகளில் இப்படம் வெளியாகியுள்ளதாக கூறப்படுகிறது. மற்ற தென்னிந்திய மாநிலங்களில் அதிகாலை 4 மணிமுதல் சிறப்பு காட்சி தொடங்கப்பட்டது. திரையரங்குகளில் வழக்கம் போல் விஜய் ரசிகர்கள் பட்டாசு வெடித்து, பேனருக்கு பால் அபிஷேகம் செய்து மேளதாளத்துடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். முதல் நாள் முதல் காட்சியில் ரசிகர்களுடன் இணைந்து வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன், யுவன் ஷங்கர் ராஜா, த்ரிஷா, கீர்த்தி சுரேஷ், அர்ச்சனா கல்பாத்தி, வைபவ் ஆகியோரும் திரையரங்கில் படம் பார்த்துள்ளனர். 

இந்த நிலையில் காஞ்சிபுரத்தில் ஒரு திரையரங்கில் படம் பார்க்கும் ரசிகர்களுக்கு சிக்கன் பிரியாணி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த முன்னெடுப்பை விஜய் மக்கள் நிர்வாகிகள் தளபதி விலையில்லா விருந்தகம் சார்பில் செய்துள்ளனர். முதல் காட்சியை பார்த்துவிட்டு வரும் ரசிகர்களுக்கு பிரியாணி வழங்குகின்றனர். மேலும் ஏழை எளிய மக்கள் என ஆயிரம் பேருக்கு சாப்பாடு போடவுள்ளனர். இதே போல் லிடோ பட வெளியீட்டின் போதும் விஜய் மக்கள் நிர்வாகிகள் பிரியாணி வாங்கினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.