விஜய் சேதுபதி மகனின் 'பீனிக்ஸ்' ரிலீஸ் ஒத்திவைப்பு .. என்ன காரணம் தெரியுமா..?
நடிகர் விஜய் சேதுபதி மகன் சூர்யா நடிப்பில் உருவாகி உள்ள பீனிக்ஸ் (வீழான்) படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய்சேதுபதி. இவர் தமிழ் தவிர தெலுங்கு, இந்தி உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் வெளியான படமான மகாராஜா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. தமிழ் மட்டுமின்றி பல்வேறு மொழிகளிலும் மிகுந்த வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில் விஜய்சேதுபதியின் மகன் சூர்யா 'பீனிக்ஸ்' என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகிறார். இப்படத்தை பிரபல சண்டைப் பயிற்சியாளர் அனல் அரசு இயக்கியுள்ளார். இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது.
இப்படம் நவ 14ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது அதன் வெளியீட்டு தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து படக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படமான ‘ஃபீனிக்ஸ் (வீழான்)’ முன்னதாக நவம்பர் 14,2024 அன்று வெளியிட திட்டமிடப்பட்டிருந்த நிலையில், எதிர்பாராத சூழ்நிலைகள் காரணமாக ஒத்தி வைக்கப்படுகிறது என்பதை வருத்தத்துடன் தங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம்.
ஃபீனிக்ஸ் (வீழான்) திரைப்படம் முன் எப்போதையும் விட வலுவாக உருவாகி வெளியாகும் என்று நாங்கள் உறுதியளிக்கிறோம். அது வெளியாகும்போது ஒரு ஆரவாரமாக இருக்கும்" என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஆனால் படத்தின் தாமதத்திற்கு சென்சார் போர்டு சில கட்டுப்பாடுகள் கொடுத்துள்ளதால்தான் வெளியீடு தாமதம் என்றும், விஜய்யின் தவெக கட்சிக் கொடி படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளதால் சென்சார் போர்டு ஆட்சேபனை தெரிவித்துள்ளது என்றும் தகவல் வெளியாகியுள்ளது.