×

அடிதூள்.. ‘லியோ’ ஷூட்டிங்கை முடித்த விஜய்.. மீண்டும் நன்றி தெரிவித்த லோகேஷ் கனகராஜ் 

 

‘லியோ‘ படத்தில் தனது பகுதி படப்பிடிப்பை நடிகர் விஜய் நிறைவு செய்துள்ளதாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். 

 முழுக்க முழுக்க ஆக்ஷன் அதிரடியில் உருவாகியுள்ள திரைப்படம் ‘லியோ’. விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி வரும் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதனால் இந்த படத்தின் அப்டேட்டுகளுக்கும், ரிலீசுக்கும் ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர். சமீபத்தில் ‘லியோ‘ படத்தின் முதல் பாடலான ‘நா ரெடி’ பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதனால் அடுத்த அப்டேட் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஆர்முடன் காத்திருக்கின்றனர்.

இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் 50 நாட்கள் நடைபெற்றது. இதையடுத்து அடுத்தக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் இப்படத்தில் நடிகர் விஜய் தனது படப்பிடிப்பை முடித்துள்ளதாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இது குறித்து வெளியிட்டுள்ள பதிவில், விஜய் தொடர்பாக காட்சிகள் படப்பிடிப்பு இன்றுடன் நிறைவு பெற்றுவிட்டது. இரண்டாவது பயணத்தை சிறப்பானதாக மாற்றியதற்கு நன்றி என்று தெரிவித்துள்ளார். அதோடு விஜய்யுடன் இருக்கும் மாஸான புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டுள்ளார். 

விஜய் தொடர்பான காட்சிகள் நிறைவுபெற்றாலும் இன்னும் ‘லியோ’ படத்தின் படப்பிடிப்பு தொடரும் என தகவல் வெளியாகியுள்ளது. செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்திற்கு அனிரூத் இசையமைத்து வருகிறார். இந்த படத்தில் சஞ்சய் தத், திரிஷா, கௌதம் மேனன், மிஷ்கின், அர்ஜூன், சாண்டி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இதுதவிர முன்னணி சினிமா பிரபலங்கள் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.