விசில் போட வைத்தாரா விஜய்? - ‘தி கோட்’ விமர்சனம்
விஜய் நடிப்பில் சமீப காலங்களில் வெளியான பீஸ்ட், வாரிசு, லியோ ஆகிய படங்கள் கலவையான விமர்சனங்களை ஒரு பக்கம் பெற்று வந்த நிலையில் இன்னொரு பக்கம் நடிகர் விஜய் சினிமாவிற்கு முழுவதாக முழுக்க போட்டுவிட்டு முழு நேர அரசியலில் குதிக்க உள்ளதாக இந்தாண்டு தொடக்கத்தில் அறிவித்தார். இதனால் ரசிகர்கள் மத்தியில் இன்ப அதிர்ச்சியும் டையே மிகுந்த சலசலப்பும் ஏற்பட்டது. இதற்கிடையே விஜய்யும் தான் கடைசியாக இரண்டு படம் நடித்துவிட்டு அதோடு சினிமாவில் இருந்து ரிட்டயர்ட் ஆகி விடுவதாகவும் தெரிவித்த நிலையில் அதில் முதல் படமாக ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் தயாரிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘தி கோட்’ படம் உருவானது. இப்படி ஆரம்பம் முதல் இறுதி வரை பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியாகி இருக்கும் இந்த கோட் திரைப்படம் அனைத்து விதமான எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்ததா, இல்லையா? என்பதை பார்ப்போம்...
மாநாடு படத்திற்குப் பிறகு தன்னுடைய இயக்கத்தில் வெளியான கஸ்டடி திரைப்படம் போதிய வரவேற்பு பெறாத நிலையில் விஜய்யுடன் ஜோடி சேர்ந்து லியோவிற்கு பிறகு விஜய்க்கும், கஸ்டடிக்கு பிறகு வெங்கட் பிரபுவுக்கும் பெரிய வெற்றி கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்த கோட் திரைப்படம் ரசிகர்களுக்கு ஒரு மிகப்பெரிய ட்ரீட்டாக அமைந்திருக்கிறது. குடியிருந்த கோயில், வரலாறு, ராஜதுரை உள்ளிட்ட படங்களின் கதையை சற்றே உல்டா செய்து அதில் தன்னுடைய பாணியையும் கலந்து, கொஞ்சம் மங்காத்தா டெக்னிக்கையும் மிக்ஸ் செய்து, அதற்குள் தளபதி ரசிகர்களுக்கான மசாலாவையும் திணித்து ஒரு கொண்டாட்டமான திரைப்படமாக கொடுத்து இருக்கிறார் இயக்குநர் வெங்கட் பிரபு.
கதையாக நாம் ஏற்கனவே பார்த்து பழகிய கதையாக இருந்தாலும் திரைக்கதையில் தனக்கே உரித்தான பாணியில் மிகவும் வேகமாக நகர்த்தி இடையிடையே சென்டிமென்ட் காட்சிகளையும் வைத்து முடிவில் ஒரு 40 நிமிடம் மிகவும் பரபரப்பான கிளைமாக்ஸ் காட்சியை வைத்து குடும்பத்துடன் கண்டுகளிக்கும் நிறைவான கலகலப்பான படமாக உருவாகி இருக்கிறார் வெங்கட் பிரபு. ஒரு பக்கா கமர்சியல் படத்துக்கான அத்தனை அம்சங்களும் இந்தப் படத்தில் இடம்பெற்றாலும் ஏற்கனவே நாம் பார்த்து பழகிய பழைய படங்களில் இருந்த அதே விஷயத்தை இந்தப் படத்திலும் பயன்படுத்தி இருக்கிறார். இருந்தாலும் ரசிகர்களுக்கான மாஸ் எலிமெண்ட்ஸ் மற்றும் குடும்ப ரசிகர்களுக்கான செண்டிமெண்ட் மாறி மாறி வந்து ஆங்காங்கே சற்று அயற்சியோடு ரசிக்க வைக்கிறது.
மேலும் படத்தில் வரும் பல்வேறு திருப்புமுனைகள், சின்ன சின்ன எதிர்பாராத கேமியோக்கள், முந்தைய படங்களின் ரெஃபரன்ஸ்கள் என இன்றைய ட்ரெண்டுக்கு ஏத்த விஷயங்களை தேவையான இடங்களில் போதும் போதும் என்ற சொல்கின்ற அளவுக்கு நிறைவாக கொடுத்திருக்கிறார் வெங்கட் பிரபு. குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியில் சிஎஸ்கே கிரிக்கெட் சம்பந்தப்பட்ட விஷயம் அனைத்து விதமான ரசிகர்களையும் ஒன்று சேர்த்து மாபெரும் வெற்றி படமாக இந்தப் படத்தை மாற்றியிருக்கிறது.
இப்படியான அரத பழசான ஒரு கதையை தனது புத்திசாலித்தனமான திரைக்கதை மூலம் அதுவும் இக்கால ட்ரெண்டிக்கு ஏற்றவாறு விஷயங்களை புகுத்தி சிறப்பாக எடுத்திருக்கிறார் வெங்கட் பிரபு. இருந்தும் படத்தின் நீளம் இன்னமும் கூட குறைத்திருக்கலாம். குறிப்பாக பாடல்கள் வேகத்தடையாக அமைந்திருக்கின்றன. இவையெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் விஜய் ரசிகர்கள் மட்டுமல்லாது பொது ரசிகர்களையும் கவரக்கூடிய படமாக கோட் மாறி இருக்கிறது. அந்த அளவுக்கு ரசிகர்களை கைதட்ட வைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு காட்சி அமைப்புகள் உருவாக்கப்பட்டிருக்கிறது.
விஜய் வழக்கம் போல் தன் ரசிகர்களுக்கு மட்டுமல்லாது அனைத்து ரசிகர்களுக்கும் ஃபுல் மீல்ஸ் கொடுத்து இருக்கிறார். ஆட்டம், பாட்டம், சண்டை, நடிப்பு, வசனம் என எல்லாத் துறைகளிலும் கவர்ந்திருக்கிறார். குறிப்பாக அப்பா விஜயை காட்டிலும் மகன் விஜய் தியேட்டரில் மாஸ் காட்டியிருக்கிறார். அவர் வரும் காட்சிகளில் தெறிக்க விடுகிறார். குறிப்பாக படத்தின் பிற்பகுதி காட்சிகளை அவரே ஆள செய்கிறார். சின்ன சின்ன வசன உச்சரிப்பு, மேனரிசம் ஆகியவைகளில் வித்தியாசம் காட்டி தியேட்டரில் கைதட்டல் மற்றும் விசில்களை பறக்கவிடுகிறார். இந்த அளவு ரசிகர் பட்டாளம் மற்றும் ஈர்ப்பை வைத்துக் கொண்டிருக்கும் ஒரு நடிகர் சினிமாவிற்கு முழுக்கு போட்டுவிட்டு அரசியல் செல்வது என்பது ரசிகர்களுக்கு மிகுந்த ஏமாற்றமாகவே இருக்கிறது. இருந்தும் தான் இருக்கும் வரை எந்த அளவு என்டர்டைன் செய்ய முடியுமோ அந்த அளவு செய்து தியேட்டருக்கு பெரும் கூட்டத்தை இழுத்து இருக்கிறார் விஜய்.
படத்தில் ஹீரோ வில்லன் என பிரதான கதாபாத்திரங்களில் விஜய் நடித்திருக்கும் நிலையில் அதற்கு அடுத்தடுத்த கதாபாத்திரங்களில் வரும் மோகன் புதியதாக மிரட்டல் நடிப்பில் மிரட்டி இருக்கிறார். விஜய்யின் நண்பர்களாக வரும் பிரபுதேவா மற்றும் பிரசாந்த் ஆகியோர் படத்திற்கு பக்கபலமாக தன் நடிப்பை வெளிப்படுத்தி இருக்கின்றனர். அவரவருக்கான காட்சிகளில் சிறப்பாக நடித்து படத்திற்கு வலு சேர்த்து இருக்கின்றனர். இவர்களின் தலைமை அதிகாரியாக வரும் ஜெயராம் கொஞ்ச நேரமே வந்தாலும் மனதில் பதிகிறார். மற்றபடி வழக்கம் போல் வெங்கட் பிரபு படத்தில் அவரின் நண்பர்கள் யார் எல்லாம் இருப்பார்களோ அவர்கள் அனைவரும் இப்படத்தில் இருக்கின்றனர் அவர்கள் அவரவர்களுக்கான வேலையை செய்கின்றனர்.
கொஞ்ச நேரமே வந்தாலும் பிரேம்ஜி, யோகி பாபு ஆகியோர் தியேட்டரில் சிரிப்பலையை உண்டாக்குகின்றனர். வழக்கமான கதாநாயகியாக வந்து செல்கிறார் நடிகை மீனாட்சி சவுத்ரி. மெயின் கதாநாயகியாக வரும் சினேகா சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி மனதில் பதிகிறார். மற்றபடி படத்தில் மூன்று நடிகர்கள் கேமியோ செய்துள்ளனர். ஒருவர் கேப்டன் விஜயகாந்த், இன்னொருவர் த்ரிஷா, மற்றொருவர் சிவகார்த்திகேயன். இவர்கள் மூவரும் வரும் காட்சிகள் தியேட்டரில் கைதட்டல்கள் அதிர்கிறது. இது தவிர இறுதி கட்ட காட்சிகளில் எம் எஸ் தோனியும் படத்தில் காட்சி தருகிறார். அது எந்த விதத்தில் வருகிறது என்பதை தாண்டி தியேட்டரில் கைதட்டல்களும், விசில் சத்தங்களாலும் அதிர்வு குறையாத அளவிற்கு சத்தம் காதை பிளக்கிறது.
யுவன் சங்கர் ராஜா இசையில் பாடல்கள் சுமார் ரகம். சில இடங்களில் அவையே வேகத் தடையாகவும் அமைந்திருக்கின்றன. ஆனால் இப்படத்தின் பின்னணி இசை மிக மிக சிறப்பாக அமைந்து இப்படத்தை பெரும் வெற்றி படமாக மாற்ற பெரும் பங்கு வகித்திருக்கிறது. குறிப்பாக இப்படத்திற்கான மாஸ் எலிமெண்ட்டான காட்சிகளில் யுவனின் பின்னணி இசை பின்னி பெடல் எடுத்திருக்கிறது. அதுவே படத்தை கரை சேர்க்கவும் உதவி இருக்கிறது. சித்தார்த்தா நுனியின் ஒளிப்பதிவில் படம் மிகப் பிரம்மாண்டம். டெக்னிக்கலாக மேக்கிங் இல் மிகவும் மெனக்கெட்டு ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். அதுவே படத்திற்கு மிகப்பெரிய பிளஸ் ஆக அமைந்திருக்கிறது.
நாம் ஏற்கனவே பார்த்து பழகிய கதையை தன்னுடைய முந்தைய படமான மங்காத்தா பட பாணியில் திரைக்கதை அமைத்து கொடுத்து அதில் எந்த அளவிற்கு மாஸ் எலிமெண்ட்ஸ்களையும், திருப்புமுனைகளையும் சேர்த்து அதனுடன் சிஎஸ்கே கிரிக்கெட்டை சேர்த்து ரசிக்க வைக்க முடியுமோ அந்த அளவு ரசிக்க வைத்து இப்படத்தை விஜய் ரசிகர்கள் மட்டுமல்லாது அனைத்து விதமான ரசிகர்களும் ரசிக்கும்படி கொடுத்து பெரும் வெற்றி படமாக இந்த கோட் திரைப்படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குநர் வெங்கட் பிரபு.