×

கோட் படத்தில் AI விஜயகாந்த் இருப்பது உறுதி.. !
 

 

வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள தி கோட் படத்தில் விஜயகாந்த் AI தொழில்நுட்பத்தில் தோன்ற இருப்பதை தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் உறுதிப்படுத்தி உள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவர் விஜய். இவர் தற்போது இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கோட் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்க, இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளர். இப்படம் வரும் செப்.5ஆம் தேதி வெளியாக உள்ளது. இதில் மோகன், சினேகா, பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு, தி கோட் படக்குழு மரியாதை நிமித்தமாக விஜயகாந்த் குடும்பத்தைச் சந்தித்தனர்.

இந்நிலையில், தி கோட் படத்தில் AI தொழில்நுட்பத்தில் விஜயகாந்த் நடித்திருப்பது உறுதியாகி உள்ளது. இதனை மேலும் உறுதிப்படுத்தும் விதமாக, இன்று விஜயகாந்தின் 72வது பிறந்தநாளை முன்னிட்டு செய்தியாளர்கள் சந்திப்பின் போது தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியதாவது, "தி கோட் திரைப்படத்தில் AI தொழில்நுட்பத்தில் விஜயகாந்த் இடம் பெற்றுள்ளார்.

அது தொடர்பாக நன்றி தெரிவிக்கும் விதமாக படக்குழு என்னைச் சந்தித்தனர். கோட் திரைப்படத்தில் AI தொழில்நுட்பத்தில் விஜயகாந்தின் காட்சிகள் சிறப்பாக அமைந்துள்ளது. முழுவதுமாக முடிக்கப்பட்டு சிறப்புக் காட்சிகள் காண்பிக்கப்பட்டது. நீங்கள் குடும்பத்துடன் தவறாது சிறப்புக் காட்சியை பார்க்குமாறும் அழைப்பு விடுத்துள்ளனர்" என தெரிவித்துள்ளார். இதன் மூலம் விஜயகாந்த் AI தொழில்நுட்பத்தில் தி கோட் படத்தில் தோன்ற இருப்பது உறுதியாகி உள்ளது.

முன்னதாக, நேற்று தி கோட் படத்திலிருந்து சில புகைப்படங்களை படக்குழு வெளியிட்டு ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது. இப்படம் சென்சார் போர்டால் தணிக்கை செய்யப்பட்டு U/A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. மேலும், இப்படத்திலிருந்து ஏற்கனவே 3 பாடல்கள் வெளியாகி உள்ள நிலையில், மேலும் 2 பாடல்களை படக்குழு விரைவில் வெளியிட இருப்பதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளியாகி உள்ளன.