×

மாநாட்டிற்கு இடம் கொடுத்த விவசாயிகளுக்கு விஜய் விருந்து... !

 

தவெக மாநாட்டுக்கு இடம் கொடுத்த விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 130 விவசாயிகளுக்கு பனையூரில் உள்ள தனது அலுவலகத்தில் விஜய் விருந்தளித்தார்.தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவரது நடிப்பில், சமீபத்தில் 'தி கோட்' என்கின்ற திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. சினிமா ஒரு புறம் இருக்க, தான் ஆரம்பித்த கட்சியான தவெகவில் உறுப்பினர்கள் சேர்க்கை, கொடி அறிமுகம் உள்ளிட்ட வேலைகளையும் மும்முரமாக செய்து கொண்டிருக்கிறார்.

சமீபத்தில் கூட, தனது கட்சியின் முதல் மாநில மாநாட்டினை கடந்த அக் 27ம் தேதி விழுப்புரம் மாவட்டம் வி.சாலையில் நடத்தி முடித்தார். இந்த மாநாட்டில் சுமார் 8 லட்சம் தொண்டர்கள் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி மாநாட்டின் மூலம் தனது கட்சியின் கொள்ளைகள், கோட்பாடுகளை அறிவித்தார்.

இந்நிலையில் மாநாட்டிற்கு இடம் கொடுத்த விவசாயிகளை கெளரவப்படுத்தும் விதமாக, விவசாயிகளை பனையூருக்கு அழைத்து நேரில் சந்தித்து அவர்களுக்கு நன்றி தெரிவிப்பதாக கூறப்பட்டது. அதன்படி, இன்று( நவ 23) மாநாட்டிற்கு இடம் கொடுத்த நூற்றிற்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் நில உரிமையாளர்களை அழைத்து அவர்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார் விஜய்.

மேலும், பேருந்து மூலமாக அழைத்து வரப்பட்ட விவசாயிகள் அவர்களது குடும்பங்கள் மற்றும் நில உரிமையாளர்களுக்கு சைவ விருந்தும் அளித்து நன்றி தெரிவித்தார். பின்னர் நிகழ்ச்சி முடிந்து அலுவலகத்தில் இருந்து விஜய் புறப்பட்டார்.

விஜய் தற்போது இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில், தனது 69வது படத்தில் நடித்து வருகிறார். இப்படம் கமர்ஷியல் ரீதியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் சென்னையில் நடைபெற்று வருகிறது. சமீபத்தில், படப்பிடிப்பு பணி முடித்து விட்டு ரசிகர்களை விஜய் சந்தித்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகின.

மேலும், விஜய் அரசியல் தலைவரான பின், கட்சி தொடர்பாக பங்கேற்கும் அனைத்து நிகழ்ச்சிகளில் விஜய் வெள்ளை நிற சட்டை, ப்ளீச் கலர் பேண்ட் அணிந்து கொண்டு தான் வருகிறார். இதன் பின்னணி என்னவாக இருக்கும் என இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.