விஜய்யின் ‘தி கோட்’ இதுவரை ரூ.300 கோடி வசூல்!
விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள ‘தி கோட்’ திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.300 கோடிக்கும் அதிகமான வசூலை குவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் ‘தி கோட்’. இந்தப் படத்தில் மீனாட்சி சவுத்ரி, சிநேகா, பிரசாந்த், பிரபு தேவா, ஜெயராம், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படத்தை அர்ச்சனா கல்பாத்தி தனது ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இப்படம் செப்டம்பர் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. கலவையான விமர்சனங்களைப் பெற்று வரும் இப்படத்தின் பட்ஜெட் ரூ.400 கோடி எனக் கூறப்படுகிறது.
இப்படம் முதல் நாள் ரூ.126.32 கோடியை வசூலித்தது என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. 8 நாட்கள் முடிவில் படம் உலகம் முழுவதும் ரூ.300 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் விஜய்யின் ‘லியோ’ படத்தை ஒப்பிடும்போது இந்த வசூல் குறைவு தான் என கூறப்படுகிறது. ‘லியோ’ 8-ஆவது நாளில் ரூ.400 கோடியை வசூலை எட்டியிருந்தது. ஆனால் ‘தி கோட்’ ரூ.300 கோடியை தான் எட்டியுள்ளது. ‘லியோ’ படம் மொத்தமாக ரூ.600 கோடி வசூலை எட்டியதாக கூறப்படும் நிலையில், ‘தி கோட்’ ரூ.500 கோடியை நெருங்குவதே சிரமம் என்ற சூழல் உருவாகியுள்ளது. மேலும், இந்த வாரம் தமிழில் கவனிக்கத்தக்க படங்கள் எதுவும் வெளியாகாததால் ‘தி கோட்’ படத்துக்கான வசூல் கூடலாம் எனத் தெரிகிறது.