அந்நியன் பட இந்தி ரீமேக் - மனம் திறந்த விக்ரம்
பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் கடந்த மாதம் 15ஆம் தேதி வெளியான திரைப்படம் தங்கலான். இப்படத்தில் பார்வதி, மாளவிகா மோகன், பசுபதி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ஞானவேல் ராஜா தயாரித்திருந்த இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருந்தார். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இப்படம் கலவையான விமர்சனத்தையே பெற்றது. இருப்பினும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று ரூ.100 கோடி கிளப்பில் இணைந்துள்ளது.
இப்படத்திற்கு திருமாவளவன் எம்.பி., சீமான், சேரன் உள்ளிட்ட பலர் பாராட்டு தெரிவித்தனர். இதையடுத்து படத்திற்கு கிடைத்த வரவேற்பு தொடர்பாக படக்குழுவினருக்கு உணவு விருந்து வைத்தார் விக்ரம். இப்படத்தின் இந்தி பதிப்பு கடந்த 6ஆம் தேதி வெளியாகியுள்ளது. அங்கு நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் தங்கலான் பட இந்தி வெளியீடு தொடர்பாக புரொமோஷனில் ஈடுபட்ட விக்ரம், அந்நியன் இந்தி ரீமேக் குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். அவர் பேசுகையில், “ஷங்கர் என்னை வைத்து அந்நியன் இரண்டாம் பாகம் எடுத்திருக்க வேண்டும்” என்று நகைச்சுவையாக சொன்ன விக்ரம், “அந்நியன் இந்தி ரீமேக் ஒரு லட்சியமாக இருக்கிறது. உண்மையாகவே ரன்வீர் சிங் ஒரு நல்ல நடிப்பை கொடுத்திருப்பார். அவருடைய நடிப்பை பார்க்க விருப்பப்பட்டேன். ஏனென்றால் அவருடைய நடிப்பு எனக்கு ரொம்ப புடிக்கும். அதனால் அந்நியன் போன்ற ஒரு கதையில் அவர் நடித்திருப்பதை பார்க்க சுவாரசியமாக இருந்திருக்கும்” என்றார்.
விக்ரம் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் 2005ஆம் வெளியான அந்நியன் படம் பெரும் வெற்றிபெற்ற நிலையில் ‘அபரிசித்' என்ற தலைப்பில் இந்தியில் டப் செய்யப்பட்டு 2006ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இதையடுத்து இப்படம் ரன்வீர் சிங் நடிப்பில் இந்தியில் ரீமேக் செய்யவுள்ளதாக 2021ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. ஆனால் அந்நியன் படத் தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன் தன்னுடன் அனுமதியின்றி படத்தை எடுப்பதாக புகார் கொடுத்திருந்ததால் படம் தொடங்கப்படாமலே இருந்தது. இதையடுத்து இந்தாண்டு ஜூலையில் ஷங்கர் அந்நியன் இந்தி ரீமேக் கைவிடப்பட்டதாகத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.