‘பஹீரா’ பட இயக்குனருடன் கூட்டணி அமைத்த விஷால்... படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு !
தனது 33வது படத்தின் அறிவிப்பை நடிகர் விஷால் அதிகாரப்பூர்வ வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் விஷால், குறும்பட இயக்குனர் து.பா.சரவணன் இயக்கத்தில் உருவாகும் 'வீரமே வாகை சூடும்' படத்தில் நடித்து முடித்துள்ளார். விஷாலின் சொந்த நிறுவனமான வி.எப்.எப் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் வெளியாக உள்ளது. தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 26-ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இந்த படத்தை அடுத்து அறிமுக இயக்குனர் வினோத்தின் இயக்கத்தில் ‘லத்தி’ படத்தில் விஷால் தற்போது நடித்து வருகிறார். இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக சுனைனா நடித்துவருகிறார். விஷாலின் நண்பர்களான ரமணா மற்றும் நந்தா ஆகியோரது ராணா பிலிம்ஸ் தயாரித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் விஷால், தன்னுடைய 33வது படத்தின் அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அதன்படி திரிஷா இல்லன்னா நயன்தாரா, பஹீரா படங்களை இயக்க ஆதிக் ரவிச்சந்திரன் இப்படத்தை இயக்கவுள்ளார். பெரிய பட்ஜெட்டில் தயாராகும் இப்படம் பான் இந்தியா திரைப்படமாக உருவாகவுள்ளது. வினோத் குமார் தயாரிக்கும் இப்படத்தின் முதற்கட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில் விரைவில் துவங்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.