×

'மெய்யழகன்' பார்த்துவிட்டு நடிகை ஜோதிகா கூறியது என்ன? - நடிகர் கார்த்தி பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்! 

 

மெய்யழகன் படம் பார்த்துவிட்டு, ரொம்ப பெருமையாக இருக்கு கார்த்தி, இதுபோன்ற படங்கள் அடிக்கடி பண்ண வேண்டும் என நடிகை ஜோதிகா கூறியதாக, நடிகர் கார்த்தி படத்தின் நன்றி தெரிவிக்கும் விழாவில் தெரிவித்துள்ளார். 96 படத்தை இயக்கிய பிரேம்குமார் இயக்கத்தில் கார்த்தி, அரவிந்த் சுவாமி உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் மெய்யழகன். இப்படம் கடந்த வாரம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்நிலையில் படத்திற்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி, சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. இதில் கார்த்தி, அரவிந்த் சுவாமி, இயக்குநர் பிரேம்குமார் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

விழா மேடையில் பேசிய நடிகர் கார்த்தி, "இந்த படத்தை புரிந்து கொண்ட செய்தியாளர்கள் அனைவருக்கும் நன்றி. ரசிகர்களுக்கு நன்றி. தமிழ் சினிமாவில் அருமையான படங்களை கொடுத்த முக்கியமான இயக்குநர்கள், நடிகர்களுக்கு நான் நன்றி சொல்லி ஆக வேண்டும்.


பாலச்சந்தர், கே.விஸ்வநாத், பாலுமகேந்திரா, மகேந்திரன், கமல் இவர்கள் எல்லாம் உறவுகளை வைத்து கதை பண்ணி ரசிக்க வைத்து நம்மை தூங்கவிடாமல் செய்துள்ளனர். இதுபோன்ற படங்கள் கிடைக்காத என்று ஏங்கிய போது அதுபோல ஒருவர் கதை எழுதியுள்ளார். அதனை எப்படி மிஸ் செய்வது.

இந்த படம் பண்ண வேண்டிய படம். விவாதத்தை இப்படம் ஏற்படுத்தியுள்ளது. உரையாடல்களை தொடங்கி வைத்துள்ளது. அதுவே இப்படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம். சினிமா பொழுதுபோக்கு மட்டும் இல்லை. எல்லா கலை அம்சமும் சேர்ந்த கலை படைப்பு என்பதை காண்பிக்க எப்போதாவதுதான் நல்ல படம் அமையும் அப்படித்தான் இதை பார்க்கிறேன்.

வாழ்க்கையில் கொஞ்சமாவது கஷ்டத்தை பார்த்தவர்களுக்கு இப்படம் புரியும் என்று நம்பினேன். இரண்டாம் உலகப் போருக்கு பின் சமுதாயம் வேறாக இருந்திருக்கும். அதற்கு பிறகு சமுதாயம் கலாச்சாரத்தை மறந்துவிட்டது அதனை கண்முன் நிறுத்தியது இப்படம்.

இன்று சர்ச்சைகளுக்கு பின்னால் போய்க்கொண்டு இருக்கிறோம். ஆனாலும் யாருனே தெரியாதவர்களுக்கு உதவி செய்த வீடியோவும் இங்கு ரசிக்கப்படுகிறது. அண்ணன் பெருந்தன்மையாக இரு என்று அடிக்கடி சொல்வார். ஊரில் உறவினர்கள் அவர்களின் தகுதிக்கு மீறி அன்பு காட்டுவார்கள். நம்மீது எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி அன்பு காட்டுபவர்களை நாம் அங்கீகரிக்கிறோமா. படம் எல்லோரிடமும் சென்று சேர்ந்துள்ளது.


இயக்குநர் பிரேம்குமார் வரலாற்று கதை ஒன்று வைத்துள்ளார். பிரமாதமான கதை. அதனை படித்து விட்டு யார் நீ என்று கேட்க தோன்றியது. கமலின் குரல் படத்திற்கு மிகப் பெரிய உதவியாக இருந்தது அவருக்கு நன்றி. எத்தனை நன்றி சொன்னாலும் பத்தாது. அண்ணாவுக்காகத்தான் பாடிக்கொடுத்தார். என்மீது இவ்வளவு அன்பாக இருக்கிறான். எனக்கு அவனை தெரியவில்லை. அதனை நான் மறைத்துள்ளேன். நான் எவ்வளவு தப்பானவன் அதனை அவனிடம் சொல்லி மன்னிப்பு கேட்பதுதான் இப்படத்தின் பெருந்தன்மை.

இந்த சந்தோசத்தை, பெருமையை கொடுத்ததற்கு அண்ணாவுக்கு நன்றி. இதுபோன்ற படம் அடிக்கடி பண்ண முடியாது பெருமையாக இரு என்றார். அண்ணி நேற்று முன்தினம் தான் படம் பார்த்தார்கள். பொறுப்பாக ரிலீஸ்க்கு முன்னாடியே படம் பார்க்க வேண்டாமா?. படம் பார்த்துவிட்டு ரொம்ப பெருமையாக இருக்கு கார்த்தி. இதுபோன்ற படங்கள் அடிக்கடி பண்ண வேண்டும். வியாபாரம் ஒருபக்கம் இருந்தாலும் மக்களுக்கும் நமக்கும் நெருக்கமான படங்கள் வந்துட்டே இருக்க வேண்டும் என்றார். அது எல்லாம் பெரிய தைரியத்தை கொடுக்கிறது நன்றி" என தெரிவித்தார்.