×

‘கே.ஜி.எஃப் 3’ எப்போது? - நடிகர் யஷ் பதில்

 

‘கே.ஜி.எஃப் 3’ எப்போது இருக்கும் என்ற கேள்விக்கு நடிகர் யஷ் பதிலளித்துள்ளார்.பிரசாந்த் நீல் இயக்கத்தில் யஷ் நடிப்பில் வெளியான படங்கள் ‘கே.ஜி.எஃப்’ மற்றும் ‘கே.ஜி.எஃப் 2’. இரண்டு படங்களுக்குமே மாபெரும் வரவேற்பினைப் பெற்றவை. குறிப்பாக ‘கே.ஜி.எஃப் 2’ அனைத்து மொழிகளிலும் வசூலைக் குவித்தது. அப்படத்தின் கதையும் 3-ம் பாகத்துக்கு தொடக்கமாகவே முடித்திருந்தார் பிரசாந்த் நீல்.


இதனால் ‘கே.ஜி.எஃப் 3’ எப்போது என்ற கேள்வியை பலரும் எழுப்பி வந்தார்கள். அதற்கு ஹாலிவுட் இணையத்துக்கு அளித்த பேட்டியொன்றில் பதிலளித்துள்ளார் யஷ். அந்தக் கேள்வியை யஷிடம் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் சுப்மன் கில் எழுப்பியிருந்தார். அதற்கு பதிலளிக்கும் விதமாக யஷ், “இப்போது நடித்து வரும் இரண்டு படங்களுக்குப் பிறகு ’கே.ஜி.எஃப் 3’ கண்டிப்பாக நடைபெறும். அதற்கான ஐடியா இருக்கிறது. அது குறித்து பேசி வருகிறோம். அது சரியான நேரம் வரும் போது கண்டிப்பாக நடைபெறும்.

அப்படத்தினை வைத்து பணமாக்க விரும்பவில்லை. ஏற்கனவே மக்கள் நிறைய கொடுத்துவிட்டார்கள். அவர்கள் பெருமைப்படும் வகையில் ‘கே.ஜி.எஃப் 3’ இருக்கும். நிறைய கிரிக்கெட் வீரர்கள், நடிகர்கள் என பலரும் அப்படம் குறித்து கேட்கிறார்கள். அந்தளவுக்கு அனைவருக்கும் ராக்கி பாய் கதாபாத்திரம் பிடித்திருக்கிறது” என்று யஷ் தெரிவித்துள்ளார்.


யஷ் நடிப்பில் ‘டாக்சிக்’ மற்றும் ‘ராமாயணம்’ ஆகிய படங்கள் உருவாகி வருகின்றன. இதில் ‘ராமாயணம்’ படத்தில் தயாரிப்பாளராகவும் மாறியிருக்கிறார் யஷ்.