×

வெளிநாட்டில் படப்பிடிப்பு நடத்தியது ஏன்? - இயக்குநர் விஷ்ணுவர்தன் விளக்கம் 

 

மறைந்த நடிகர் முரளியின் இரண்டாவது மகன் ஆகாஷ் முரளி கதாநாயகனாக அறிமுகமாகும் படம், ‘நேசிப்பாயா’. இந்தப் படத்தை விஷ்ணுவர்தன் இயக்கியுள்ளார். அதிதி ஷங்கர், பிரபு, சரத்குமார், குஷ்பு, கல்கி கோச்சலின் உட்பட பலர் நடித்துள்ளனர். எக்ஸ்பி பிலிம் கிரியேட்டர்ஸ் சார்பில் சேவியர் பிரிட்டோ தயாரித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார்.

இந்தப் படம் பற்றி விஷ்ணுவர்தன் கூறியதாவது: இந்தியில் ‘ஷெர்ஷா’ என்ற படத்தை இயக்கினேன். கரோனா காலகட்டம் என்பதால் அந்தப் படம் முடிய நாட்கள் ஆகிவிட்டன. ‘நேசிப்பாயா’ படம் மூலம் மீண்டும் தமிழுக்கு வந்திருக்கிறேன். இது காதல் கதையை கொண்ட படம். என் மனதில் ஒரு கதை இருந்தது. நேரம் வரும்போது இயக்கலாம் என்று நினைத்திருந்தேன். ஆகாஷ் முரளி என்னை மும்பையில் சந்தித்தார். அவருக்காக இந்தக் கதையை பண்ணலாம் என்று முடிவு செய்து உருவாக்கினேன்.
 
இது காதல் கதை என்றாலும் ரசிகர்களை உற்சாகப்படுத்தக் கூடிய ஆக்‌ஷன், டிராமா திரைக்கதையில் படம் பயணிக்கும். ஆகாஷ் முரளி அறிமுக நடிகர் என்பது போல் இல்லாமல் சிறப்பாக நடித்திருக்கிறார். ஆறடி உயரம், கணீர் குரல் என்று ஆக்‌ஷன் காட்சிகளில் மிரட்டி இருக்கிறார். அதிதி ஷங்கர், சினிமாத்தனம் இல்லாத பெண்ணாக இருப்பார். அதனால் தான் அவரை நாயகியாகத் தேர்வு செய்தேன். இதில் கல்கி கோச்சலின் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.

இதன் கதை தமிழ்நாட்டில் தொடங்கினாலும், 90 சதவிகிதம் போர்ச்சுக்கல் நாட்டில் நடக்கிறது. கதைப்படி, மொழி தெரியாத ஒரு நாடுதேவைப்பட்டதால் போர்ச்சுக்கல்லில் படமாக்கினோம். ஒளிப்பதிவாளராக பிரிட்டிஷை சேர்ந்த கேமரன் எரிக் பிரசன், சண்டை இயக்குநராக ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ஃபெட்ரிகோ பணியாற்றி இருக்கிறார்கள். இவர்கள் பணிகளும் பாராட்டும்படி இருக்கும். இவ்வாறு விஷ்ணுவர்தன் கூறினார்