×

‘தி கோட்’ ஓடிடி பதிப்பில் கூடுதல் காட்சிகள் இல்லாதது ஏன்? - வெங்கட்பிரபு விளக்கம்

 

திட்டமிட்டப்படி ‘தி கோட்’ படத்தின் ஓடிடி பதிப்பில் கூடுதல் காட்சிகள் இல்லாததன் காரணத்தை இயக்குநர் வெங்கட்பிரபு தெரிவித்துள்ளார்.வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய், பிரசாந்த், பிரபுதேவா, சிநேகா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘கோட்’. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வெளியிட்ட இந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூல் ரீதியாக மாபெரும் வரவேற்பினைப் பெற்றது.


‘தி கோட்’ படத்தின் நீளம் கருதி நீக்கப்பட்ட காட்சிகள் அனைத்தையும் இணைத்து ஓடிடியில் வெளியிட படக்குழு திட்டமிட்டது. இதனை வெங்கட்பிரபுவும் சில பேட்டிகளில் உறுதிப்படுத்தினார். ஆனால், அக்டோபர் 3-ம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் ‘தி கோட்’ வெளியாகி இருக்கிறது. இதில் திரையரங்கில் வெளியான பதிப்பே வெளியாகியுள்ளது.இது தொடர்பாக இயக்குநர் வெங்கட்பிரபு, “‘தி கோட்’ படத்தின் இயக்குநர் பதிப்புக்கு இன்னும் கிராபிக்ஸ் காட்சிகள் மற்றும் இறுதிக்கட்டப் பணிகள் முடிவடையவில்லை. ஆகையால் தயாரிப்பாளருடன் கலந்து பேசி அதனை நீக்கப்பட்ட காட்சிகளாகவோ அல்லது நீட்டிக்கப்பட்ட பதிப்பு வரும் காலத்தில் வெளியாகும். இப்போதைக்கு திரையரங்க பதிப்பை கண்டு ரசியுங்கள்” என்று தெரிவித்துள்ளார்.‘தி கோட்’ படத்திலிருந்து நீக்கப்பட்ட காட்சிகளை ஓடிடியில் பார்த்துவிடலாம் என்று காத்திருந்த ரசிகர்களுக்கு இது ஏமாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.