×

60 வருடங்களுக்கு முன் இருந்த சென்னையைக் காட்டிய மதராசப்பட்டினம்! #10YearsOfMadrasapattinam

சினிமாவையும் காதலையும் எக்காலத்திலும் பிரிக்க முடியாது. ஒவ்வொரு பத்தாண்டுகளுக்கும் காதலை முன்னிருத்திய படம் இமாலய வெற்றி வாகை சூடுவதையும், அப்படத்தின் நாயக, நாயகிகள் திரை உலகில் தங்களுக்கான இடத்தைப் பிடிப்பதையும் நாம் பார்த்தே வருகிறோம். 2010-ம் ஆண்டு வெளிவந்த ‘மதராசப்பட்டினம்’ திரைப்படமும் காதல் கதை கொண்டதுதான். ஆயினும் அதன் பின்புலமாகக் கொண்டிருந்த காலக்கட்டமே பத்தாண்டு கழித்தும் அதை எல்லோரின் நினைவிலும் இருக்கிறது. கதை நடப்பது இந்தியா நாடு, பிரிட்டிஷ் அரசிடம் அடிமைப்பட்டிருந்த காலம். ஆதிக்க வர்க்கத்தின் பெண்ணுக்கு
 

சினிமாவையும் காதலையும் எக்காலத்திலும் பிரிக்க முடியாது. ஒவ்வொரு பத்தாண்டுகளுக்கும் காதலை முன்னிருத்திய படம் இமாலய வெற்றி வாகை சூடுவதையும், அப்படத்தின் நாயக, நாயகிகள் திரை உலகில் தங்களுக்கான இடத்தைப் பிடிப்பதையும் நாம் பார்த்தே வருகிறோம். 2010-ம் ஆண்டு வெளிவந்த ‘மதராசப்பட்டினம்’ திரைப்படமும் காதல் கதை கொண்டதுதான். ஆயினும் அதன் பின்புலமாகக் கொண்டிருந்த காலக்கட்டமே பத்தாண்டு கழித்தும் அதை எல்லோரின் நினைவிலும் இருக்கிறது.

கதை நடப்பது இந்தியா நாடு, பிரிட்டிஷ் அரசிடம் அடிமைப்பட்டிருந்த காலம். ஆதிக்க வர்க்கத்தின் பெண்ணுக்கு அடிமைப்படுத்தப்பட்ட ஆண் மீது காதல் வருகிறது. இருவரும் சந்தித்துக்கொள்வதே பெரும் போராட்டம், ஒருவர் பேசிக்கொள்ளும் மொழி மற்றவர்க்கும் புரியாத நிலையும் அக்காதல் வளர்வதுமான காட்சிகள் கவித்துவத்துடன் எடுக்கப்பட்டிருந்தன. அக்காதலுக்கு எதிர்ப்பு வரும் என்பது எதிர்பார்த்த ஒன்றுதான். ஒரே ஊருக்குள் இருவர் விரும்பினாலே எதிர்ப்பு வரும் சூழலில் வேறு வேறு நாட்டினர், வெவ்வேறு நிறத்தினர், வெவ்வேறு பண்பாட்டினைக் கொண்டவர்கள் எனப் பல வேறுபாடுகள் இருக்கையில் எதிர்ப்பு வலுவாகவே இருந்தது. ஒரு கட்டத்தில் அக்காதல் நிறைவேறாமல் போகிறது. அப்பெண் பிறந்த நாட்டுக்குச் செல்ல, நாயகன் என்னவாகிறான் என்பது தெரியவில்லை. 60 ஆண்டுகள் கழித்து, அவனைக் காண முதிர்ந்த பெண்ணாகத் தேடி வருகிறாள் நாயகி.

இந்தப் பின்புலத்தில் இக்கதையைப் படமாக்க இயக்குநர் விஜய் முடிவெடுத்தது துணிச்சலானது. அதற்கான உழைப்பை படத்தின் ஒவ்வொரு பிரேமிலும் காட்டியிருப்பார். சலவைத் தொழிலாளிகளின் வாழ்க்கை, இருக்கும் இடம், பேசும் மொழி ஒருபக்கம் என்றால், பிரிட்டிஷ் காரர்களின் இருப்பு, அவர்கள் வசித்த பங்களா என சின்ன விஷயத்தையும் விட்டுவிடாமல் நுணுக்கமாக ரசித்து எடுத்திருப்பார்.

மதராசப்பட்டினம் படத்தில் பாராட்டுக்கு உரியவற்றில் முதன்மையானவை தகவல் சேகரிப்பும் அதனை கண்முன் நிகழ்த்திக் காட்டிய விதமும். கூவத்தில் படகு ஓடுவதும், சென்னை நரத்தில் டிராம் வண்டிகளை ஓடச்செய்வதும் கடும் உழைப்பு கோருபவை. அவற்றை வெறும் வியக்க வைப்பதாக மட்டுமே காட்டிவிடாது கதையோடு மிக நேர்த்தியாகக் கோர்த்திருப்பார் விஜய்.
மதராசப்பட்டினம் படம் பலருக்கும் பெருமைக்கு உரிய அடையாளமாக மாறியது. ஏற்கெனவே கிரீடம், பொய் சொல்லப்போறோம் ஆகிய படங்களை ஏ.எல். விஜய இயக்கியிருந்தாலும் இப்படமே அவருக்கான பெரும் அடையாளமானது. நடிகர் ஆர்யாவின் திரைப்பயணத்தில் மிக முக்கியமான படம் இது. காதல் காட்சிகளைப் போல ஆக்‌ஷன், சென்டிமெண்ட் காட்சிகளிலும் நேர்த்தியாக தன் நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். அறிமுக நாயகி என்பதாக அல்லாமல் எமி ஜாக்ஸன் காதலை வெளிப்படுத்தும்போதும், இழப்பின்போதும் நிறைவான நடிப்பை வழங்கியிருப்பார். நாசர், கொச்சின் ஹனிபா, எம்.எஸ்.பாஸ்கர், பாலாசிங், ஜார்ஜ் மரியான், சதிஷ் எனப் பெரிய நடிகர் பட்டாளமே பங்குபெற்றிருந்தது. குறிப்பாக, ஆங்கில ஆசிரியராக இடம்பெற்ற ஜார்ஜ் மரியான் தனித்து அடையாளம் காணப்பட்ட படம் இது.

படத்தின் இன்னொரு பெரும் பலம் இசை. பின்னணி இசையிலும் பாடல்களிலும் தேவையான பங்களிப்பைச் செய்திருப்பார் ஜி.வி.பிரகாஷ். ‘பூக்கள் பூக்கும் தருணம்’ பாடல் இப்பவும் பலரது காலர் டியூனாக இருந்துவருகிறது. அதற்கேற்றவாறு நா.முத்துக்குமார்
வார்த்தை தேவையில்லை வாழும் காலம் வரை
பாவை பார்வை மொழிப் பேசுமே
நேற்று தேவையில்லை நாளை தேவையில்லை
இன்று இந்த நொடி போதுமே
எனப் படத்தின் மையச்சரடை பாடல் வரிகளில் கொண்டுவந்திருந்தார்.
இயக்குநர் ஏ.எல்.விஜய் இன்னும் பல படங்களை இயக்கினாலும் மதராசப்பட்டினம் அவருக்கு என்றென்றும் பெருமை சேர்க்கும் படமாகவே அமையும்.