×

கலைஞர், ஒரு இன்ஸ்டன்ட் கவிஞராக மாறிய நெகிழவைக்கும் சம்பவம்.!

கலைஞர் கருணாநிதி, கதை, திரைக்கதை, வசனம் எனப் பல படங்களுக்கு எழுதியுள்ளார். அதெல்லாம் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத பக்கங்கள்.! ஆனால், அவர் பாடல் எழுதியது என்று பார்த்தால் அது சின்ன லிஸ்ட் தான். மந்திரிகுமாரியில்- ‘ ஊருக்கு உழைப்பவன்டி..’ பராசக்தியில்- ‘பூமாலையே..’ காஞ்சித் தலைவனில்- ‘வெல்க நாடு.. வெல்க நாடு..’ பூம்புகாரில் – ‘ஒருவனுக்கு ஒருத்தி..’ போன்ற சில பாடல்கள் தான்! பாடல் எழுதுவதில் கலைஞர் அவ்வளவு ஆர்வம் காட்டுவதில்லை. அதற்கு காரணம்… அவரது நெருங்கிய
 

கலைஞர் கருணாநிதி, கதை, திரைக்கதை, வசனம் எனப் பல படங்களுக்கு எழுதியுள்ளார். அதெல்லாம் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத பக்கங்கள்.! ஆனால், அவர் பாடல் எழுதியது என்று பார்த்தால் அது சின்ன லிஸ்ட் தான்.
மந்திரிகுமாரியில்- ‘ ஊருக்கு உழைப்பவன்டி..’ பராசக்தியில்- ‘பூமாலையே..’ காஞ்சித் தலைவனில்- ‘வெல்க நாடு.. வெல்க நாடு..’ பூம்புகாரில் – ‘ஒருவனுக்கு ஒருத்தி..’ போன்ற சில பாடல்கள் தான்! பாடல் எழுதுவதில் கலைஞர் அவ்வளவு ஆர்வம் காட்டுவதில்லை. அதற்கு காரணம்… அவரது நெருங்கிய நண்பர்கள் பலர் கவிஞர்களாக இருந்ததுதான். ஆனால் ஒரு பாடலை திடீரென எழுத வேண்டிய சூழ்நிலை கலைஞருக்கு வந்தது –
அந்த படம் 1966 ஆம் ஆண்டு வெளிவந்த ‘மறக்க முடியுமா’.

படத்தின் தயாரிப்பாளரே கலைஞர் தான். அவரின் மேகலா பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரித்தது. கலைஞர் தான் திரைக்கதை வசனம். இயக்குனர் முரசொலி மாறன். படத்துக்கு இசை ராமமூர்த்தி.
எம்.எஸ். விஸ்வநாதனிடமிருந்து, ராமமூர்த்தி தனியாக பிரிந்து இசை அமைத்து ஹிட்டித்த பாடல்களைக் கொண்ட ஒரு சில படங்களில் இந்த மறக்க முடியுமாவும் ஒன்று. படத்தில் ஒரு சோக சிச்சுவேஷனுக்கு ஒரு பாடலை எழுத வந்தவர் கவிஞர் மாயவநாதன்.

மாயவநாதன் ஒரு அருமையான கவிஞர். வித்தியாசமான வார்த்தைகளில் உணர்வுகளை காட்டுவதில் வல்லவர். அதுக்கு அவர் எழுதி பெரும் ஹிட்டடித்த இந்த இரண்டு பாடல்களே சாட்சி, ‘தன்னிலவு தேனிறைக்க… தாழை மரம் நீர் தெளிக்க… கன்னிமகள் நடை பயின்றே வந்தாள்… இளம் காதலனை எண்ணி நாணி நின்றாள்…’ அப்புறம் காலத்தாலும் அழிக்க முடியாத பாடலான ‘நித்தம் நித்தம் மாறுவது எத்தனையோ..’ இந்த இரண்டை சொன்னாலே அவர் யார் இந்தத் தலைமுறைக்கும் புரிந்து விடும்.
இப்படி மக்கள் மனதைவிட்டு நீங்காத பல பாடல்களை எழுதிய திறமைசாலி. ஆனால், கவிஞர் மாயவநாதனிடம் ஒரு பிரச்சனை இருந்தது, மிகவும் கோபக்காரர், சின்ன சின்ன விஷயத்திற்கெல்லாம் டென்ஷனாகி விடுவார். பொதுவாக கவிஞர்கள் என்றாலே கோபம் இருக்கத்தான் செய்யும்… இதற்கு வரலாற்றில் நிறைய சாட்சி இருக்கிறார்கள்.இந்த இடத்தில் நாம முக்கியமான இன்னொரு விசயத்தையும் சொல்லி ஆகணும்… ‘கவிஞர்கள் ‘ என்றதும் ஃபேஸ் புக்கில் எழுதும் பலரை ஒப்பீடாக எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.! ‘எல்லோருமே அப்படியா..!?’ என்று இந்த செய்தியைப் படிக்கும் போதே… கமெண்ட் பாக்ஸைத் தேட வேண்டாம் ப்ளீஸ்..! இது வேற.. அப்போது சினிமா இருந்த சூழலில் மாயவனாதனது கோபமே, அவருக்கு தொடர்ச்சியாக பாடல் வாய்ப்புகள் கிடைக்காமல், கடைசியில் வறுமையில் மிக உழன்று தன் வாழ்வை முடித்துக் கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார் என்பதுதான் காலம் உணர்த்தும் சோகம்.

TK ramamurthy
கலைஞருக்கு அவரை ரொம்ப பிடிக்கும் என்பதால் , மாயவநாதனை ‘மறக்க முடியுமா’ படத்தில் பாடல் எழுதவைக்கும் முடிவில் இருந்திருக்கிறார். அவரின் விருப்பத்தின் பேரில் பாடல் எழுத அழைக்கப்பட்டிருந்தார் மாயவநாதன். ஆனால் ராமமூர்த்தியிடமிருந்து இன்னும் ட்யூன் வந்து சேரவில்லை. எப்ப மெட்டு கிடைக்கும்? எப்ப மெட்டு கிடைக்கும்? என்று ராமமூர்த்தியை நச்சரிக்க ஆரம்பிக்கிறார் மாயவநாதன். கோபப்பட்டது போல் காட்டிக்கொண்ட ராமமூர்த்தி, ‘மாயவநாதன்… மாயவநாதன்… மாயவநாதன்… மாயவநாதன்’ என்று பாடிக்காட்டி இதுதான் இந்தப் பாட்டுக்கு மெட்டு, இந்த மெட்டுக்கு பாட்டு எழுதுங்க என்று மாயவநாதனிடம் ராமமூர்த்தி சொல்லியிருக்கிறார்.
பொதுவாக சினிமாவில் பாடல் எழுதும் போது ‘தன்னன்ன… தன்னன…’ என்று மெட்டுப் போட்டுக் காட்டுவார்கள். உதாரணத்திற்கு ‘வறுமையின் சிவப்பு ‘ படத்தில் ஸ்ரீதேவி பாடலுக்கான மெட்டை ‘தன்னனானா.’ போட்டுக் காட்ட… கமல், ‘சிற்பி இருக்குது முத்துமிருக்குது திறந்து பார்க்க நேரமில்லடி ராசாத்தி..’ என்று பாடுவார்… ஞாபகம் இருக்கிறதா.! அந்த மாதிரித்தான் இதுவும். சில இசை ஜாம்பவான்கள் தங்களுக்கு பிடித்த பெயரையும் பயன் படுத்தி மெட்டுப் போடுவதுண்டு. கிராமங்களில் கபடி விளையாட்டிலும் இந்த வித்தையைப் பயன் படுத்துவதைப் பார்த்திருப்பீர்களே ; அதேதான் !
murasoli-maran
ராமமூர்த்தியின் இந்த வார்த்தை விளையாட்டைத் தப்பாகப் புரிந்து கொண்ட மாயவனாதன், இசையமைப்பாளர் தன்னைக் கிண்டலடிப்பதாகப் புரிந்து கொண்டு, கோபமாக அங்கிருந்து வெளியேறிச் சென்று விடுகிறார்.
படத்தின் தயாரிப்பாளரான கலைஞர், பாடல் பதிவைப் பார்ப்பதற்காக ரெக்கார்டிங் தியேட்டருக்கு வருகிறார். பாடல் எழுதி ஆகிவிட்டதா என்று கேட்க, விளையாட்டாக சொன்னதைக் கேட்டு மாயவநாதன் கோபித்துக்கொண்டு சென்றுவிட்டார் என்று கலைஞரிடம் ராமமூர்த்தி சொல்ல, பாடல் உடனடியாக ரெக்கார்டிங் செய்யப்பட வேண்டிய அவசரம், சொல்லுங்கள் மெட்டை நானே பாட்டை எழுதி விடுகிறேன் என்கிறார் கலைஞர்.

அப்போதெல்லாம் பெரிய பிரபலங்கள் வீட்டில் மட்டுமே டெலிஃபோன் இருந்த கோபித்துக்கொண்டு கிளம்பிப்போன கவிஞரை எங்கே போய்த் தேடுவது.!? அதனால் பாடலின் அவசரத் தேவை கருதி கலைஞர் இந்த முடிவை எடுக்கிறார். உண்மையில் அந்த பாடலின் பல்லவி, சரணம் முழுக்க மாயவநாதன் என்ற வரிக்கேற்றவாறு தான் மெட்டுக்கள் முழுவதும் அமைந்திருந்தன. அந்த பாடல் ‘காகித ஓடம்… கடல் அலை மீது… போவது போலே மூவரும் போவோம்…’ என்ற பாடல். இப்போதும் காகித ஓடம் பாடலை மாயவநாதன் என்ற வார்த்தையை வைத்து பாடிப் பாருங்கள், பாடல் முழுவதுமே அந்த மாயவநாதனை வைத்தே பாடி விடலாம்.
ஆனால் இதே மறக்க முடியுமாவில் இன்னொரு பாடல் எழுதியுள்ளார் மாயவநாதன். அந்த பாடலின் வரிகள் ‘வானும் நிலமும் வீடு…
காற்றும் மழையும் உணவு…
காலும் கையும் ஆடை…
ஏழை வாழ்வு சிம்பிள்… மாயவநாதன், ஏழ்மையின் உணர்வுகளை எவ்வளவு நுட்பமாக எழுதியுள்ளார் பாருங்கள். காரணம், மாயவநாதன் கடைசிவரை வறுமையிலே வாழ்ந்து மறைந்தார். அதை நினைத்தோ என்னவோ கலைஞரும் மாயவநாதன் எழுதவேண்டிய பாடலை ‘காகித ஓடம் கடலலை மீது போவது போலே மூவரும் போவோம்…’ என்று எழுதி வைத்தார்.
-@ஜேம்ஸ் டேவிட்