கொழுப்பை குறைக்க அறுவை சிகிச்சை... சோகத்தில் முடிந்த நடிகையின் வாழ்க்கை !

 
chetana raj

 கொழுப்பை கரைக்க அறுவை செய்த இளம் நடிகை உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கன்னட சின்னத்திரையில் இளம் சிறில் நடிகையாக இருப்பவர் சேத்தனா ராஜ். பிரபல தொலைக்காட்சிகளில் பல சீரியல்களில் நடித்து வரும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இதற்கிடையே தனது அழகை கூட்டுவதற்காக பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்ய அனுமதிக்கப்பட்டார். 

chetana raj

இதையடுத்து நேற்று பிற்பகல் சேத்தனா ராஜூக்கு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்தனர். அறுவை சிகிச்சைக்கு பிறகு நுரையீரலில் நீர் தேங்கியதால் அவரின் உடலில் சில மாற்றங்கள் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவதிப்பட்டு வந்த அவர், துடிதுடித்து உயிரிழந்தார். மருத்துவர்களின் தவறான அறுவை சிகிச்சையால் இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

தற்போது சேத்தனா ராஜின் உடல் தனியார் மருத்துவமனையில் இருந்து அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 21 வயதேயாகும் சீரியல் நடிகை சேத்தனா ராஜ் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேத்தனா ராஜ் மறைவுக்கு பிரபலங்களும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.