கார் விபத்தில் சின்னத்திரை நடிகரின் மகன் உயிரிழப்பு
Nov 1, 2024, 13:35 IST
சென்னை ராஜா அண்ணாமலைபுரம் பகுதியை சேர்ந்தவர் சின்னத்திரை நடிகர் கார்த்திக். அவரது மகன் லித்திஷ் தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.இந்நிலையில் லித்திஷ் தீபாவளி பண்டிகையை கொண்டாடிவிட்டு நேற்று மாலை தனது நண்பர்களுடன் ஓ.எம்.ஆரில் உள்ள விளையாட்டு திடலுக்கு விளையாட சென்றுள்ளார். அங்கு சென்றுவிட்டு நண்பர்களுடன் காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். வேளச்சேரி பகுதியில் வந்து கொண்டிருந்த போது கார் கட்டுப்பாட்டை இழந்து சாலை நடுவில் இருந்த தடுப்புச் சுவரில் மோதியது. இந்த விபத்தில் காரை ஓட்டி வந்த லித்திஷ் மற்றும் நண்பர்கள் பலத்த காயம் அடைந்தனர். காயங்களுடன் சிக்கி தவித்தவர்களை பொதுமக்கள் மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவமனையில் லித்திசை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். அவரது உடல் பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. தீபாவளி பண்டிகை நாளில் சின்னத்திரை நடிகர் மகன் விபத்தில் சிக்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.