ஜெ. அன்பழகன் மறைவு : இயக்குநர் அமீர் கண்ணீர் அஞ்சலி!

ஜெ. அன்பழகன் மறைவு : இயக்குநர் அமீர் கண்ணீர் அஞ்சலி!

கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் இன்று காலை மணிக்கு காலமானார்.  

மூன்று முறை எம்எல்ஏவாக இருந்த அவர் 2001 இல் தி.நகரிலும் 2011 மற்றும் 16 இல் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் வெற்றி பெற்றார்.  15 ஆண்டுகளுக்கு மேலாக திமுகவின் மாவட்ட செயலாளராக இருந்த இவர்  கொரோனா நேரத்திலும் தீவிரமாக களப்பணியில் ஈடுபட்டு வந்தார். ஜெ.அன்பழகன் மறைவிற்கு திமுக தலைவர் முக ஸ்டாலின், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, எம்பி கனிமொழி உள்ளிட்ட பலரும்  இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

ஜெ. அன்பழகன் மறைவு : இயக்குநர் அமீர் கண்ணீர் அஞ்சலி!

இந்நிலையில் இயக்குநர் அமீர் வெளியிட்டுள்ள  இரங்கல் செய்தியில், ” எனதருமை அண்ணனும் திமுக எம்எல்ஏவுமான ஜெ. அன்பழகன் அவர்கள்
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார் என்கிற செய்தியை கேட்டறிந்த நாளில் இருந்தே மனம் வேதனைப்பட்டதோடு மட்டுமல்லாமல் அவரது மகன்  திரு. ராஜா அன்பழகன் அவர்களிடம் அண்ணனின் உடல் நிலை குறித்து தொலை பேசியில் விசாரித்துக்கொண்டே இருந்தேன். இந்நிலையில் இன்று காலை அண்ணனின் மறைவுச் செய்தி குறித்து கேட்ட நிமிடம் முதல் இப்போது வரை அந்த உண்மைச் செய்தியை ஏற்க என் மனம் மறுக்கிறது. காரணம் அவரின் பழகும் தன்மை, நேர்மையான பேச்சு, அரசியலற்ற அன்பு, உண்மையைச் சொல்லும் துணிச்சல், எதிரே இருப்பவரின் இடத்தில் தன்னை நிறுத்திப் பார்த்து முடிவெடுக்கும் பண்பு…. என சொல்லிக்கொண்டே போகலாம் அவரிடம் நிறைந்திருந்த பல்வேறு குணாதிசயங்களை.

ஜெ. அன்பழகன் மறைவு : இயக்குநர் அமீர் கண்ணீர் அஞ்சலி!

ஒரு அரசியல்வாதியுடன் சேர்ந்து படம் எடுப்பதா என்கிற என்னுடைய ஐயத்தை எங்கள் முதல் சந்திப்பிலேயே தகர்த்தெரிந்து பத்து ஆண்டுகளுக்கும் மேலாக நட்பை வளர்த்து என் உள்ளத்தில் குடி புகுந்து கொண்ட ஆளுமை அவர். ஒரு நல்ல தயாரிப்பாளராக, விநியோகஸ்தராக, தயாரிப்பாளர் சங்கத்தின் மீது அக்கறை கொண்டவராக, தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சேர்க்க வேண்டும் என்கிற தொலை நோக்கு சிந்தனை கொண்டவராக இப்படி பல கோணங்களில் அவரை நான் வெகு அருகில் இருந்து பார்த்திருக்கிறேன். அப்படிப்பட்ட ஒரு நல்ல மனிதரை இன்று நான் இழந்திருக்கிறேன் என்கிற வேதனையோடு மட்டுமல்லாமல்  அவரை இழந்து வாடும் அவரது குடும்ப உறவுகளின் உள்ளத்தில் சாந்தியையும் அவரது இறப்பிற்குப் பின் உள்ள வாழ்க்கையில் அமைதியையும் கொடுக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் அமீர் அன்பழகன் இறுதிசடங்கில் நேரடியாக சென்று கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. 

Share this story