படத்தின் லாபத்தில் தொண்டு நிறுவனங்களுக்கு நிதி... '777 சார்லி' படக்குழுவினர் அறிவிப்பு!
படத்தின் லாபத்தில் ஒரு பகுதியை தொண்டு நிறுவனங்களுக்கு வழங்க இருப்பதாக 777 சார்லி படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
பிரபல கன்னட நடிகரான ரக்ஷித் ஷெட்டி நடிப்பில் வெளியான '777 சார்லி' திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. கிரண்ராஜ் என்பவர் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் பாபி சிம்ஹா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கன்னடத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியானது.
செல்லப் பிராணிகளின் நிபந்தனையற்ற அன்பை வெளிப்படுத்திய இந்தப் படம் அனைத்து தரப்பு ரசிகர்களாலும் கொண்டாடப்பட்டது. இந்நிலையில் படத்தின் லாபத்தில் ஒரு பங்கை தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கு வழங்க இருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

"777 சார்லி திரைப்படம் உங்களை வந்தடைந்து 25 நாட்கள் ஆகிறது. அன்றிலிருந்து படத்திற்கு அளவற்ற அன்பு கிடைத்து வருகிறது.. இந்தப் படம் மூலம் எங்களுக்கு கிடைத்த பாராட்டுகளையும் அங்கீகாரத்தையும் நங்கள் புரிந்துகொள்ளத் தொடங்கும்போது எங்கள் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை.
இந்தத் திரைப்படத்தை திரைக்குக் கொண்டு வருவதில் அயராது உழைத்த பலரைக் கொண்டாடுவதுதான் இந்த வெற்றியைக் கொண்டாட ஒரே வழி என்று நாங்கள் நம்புகிறோம். எனவே 777 சார்லி ஈட்டும் லாபத்தில் 10 சதவீதத்தை படத்திற்காக கடினமாக உழைத்த ஒவ்வொரு தனிநபருடனும் பகிர்ந்து கொள்ள முடிவு செய்துள்ளோம்.

777 சார்லியின் தயாரிப்பாளர்கள் என்ற வகையில், நம்மைச் சுற்றியுள்ள விலங்குகளுக்கு மகிழ்ச்சியான மற்றும் பாதுகாப்பான சூழலை உருவாக்குவதற்கான முயற்சி மற்றும் வளங்களை நாங்கள் அறிவோம். இந்த வெளிச்சத்தில், ஆதரவற்ற நாய்கள் மற்றும் விலங்குகளின் நலனுக்காக அர்ப்பணிப்புடன் செயல்படும் நாடு முழுவதும் உள்ள தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு சார்லியின் பெயரில் லாபத்தில் 5 சதவீதத்தை வழங்க விரும்புகிறோம்.
நமது ஒளியைப் பயன்படுத்தி பிறருடைய ஒளியைப் பற்றவைப்பது உலகையே ஒளிரச் செய்யும். உங்கள் அன்பால் எங்கள் உலகத்தை ஒளிரச் செய்த உங்கள் ஒவ்வொருவருக்கும் நன்றி.
எப்போதும் உங்களுடைய ரக்ஷித் ஷெட்டி" என்று தெரிவித்துள்ளார்.

