‘அயன்’ பட இயக்குனருடன் கை கோர்க்கும் சிவகார்த்திகேயன்!?
இயக்குனர் கேவி ஆனந்த் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இயக்குனர் கேவி ஆனந்த் கடைசியாக சூர்யா நடிப்பில் காப்பான் படத்தை இயக்கியிருந்தார். பத்திரிகை நிருபராக, ஒளிப்பதிவாளராக சினிமாவில் நுழைந்த கேவி ஆனந்த் கனா கண்டேன் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அதை அடுத்து சூர்யா நடிப்பில் கேவி ஆனந்த் இயக்கத்தில் வெளியான அயன் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. பின்னர் கோ, மாற்றான், அனேகன், கவண், காப்பான் ஆகிய படங்களை இயக்கினார். நம் கண்ணிற்கு பின்னால் நடக்கும் அரசியலை வெளிச்சம் போட்டுக் காண்பிப்பதில் கேவி ஆனந்த் தேர்ந்தவர்.

காப்பான் படத்தை அடுத்து கேவி ஆனந்த் தற்போது புதிய கதை ஒன்றைத் தயார் செய்திருக்கிறாராம். இந்தப் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
கேவி ஆனந்த் சொன்ன கதை தயாரிப்பு நிறுவனத்திற்குப் பிடித்துப் போகவே தயாரிக்க சம்மதித்ததுடன் இப்படத்தில் ஹீரோவாக நடிக்க சிவகார்த்திகேயன் பொருத்தமாக இருப்பார் என்றும் தெரிவித்துள்ளனராம்.

எனவே சிவகார்த்திகேயனிடம் இப்படம் குறித்து பேச்சு வார்த்தை நடத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. பெரும்பாலும் சிவகார்த்தியேன் இந்தப் படத்தில் நடிக்க ஒப்புக்கொள்வார் என்று தான் எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது சிவகார்த்திகேயன் ‘டான்’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் நடித்து முடித்தவுடன் கேவி ஆனந்த் இயக்கத்தில் நடிக்கலாம் என்று கூறப்படுகிறது.