பிரபல இயக்குனர் கே.விஸ்வநாத் மரணம்... திரையுலகினர் கண்ணீர் அஞ்சலி !

viswanath

மூத்த இயக்குனர் கே.விஸ்வநாத் உடல் நலக்குறைவால் நேற்றிரவு காலமானார். 

தென்னிந்தியாவில் பிரபலமான இயக்குனராக இருந்தவர் கே.விஸ்வநாத். 1957-ஆம் ஆண்டு சென்னையில் தனது திரைப்பயணத்தை தொடங்கினார். முதலில் ஒளிப்பதிவாளராக இருந்த அவர், 1975-ஆம் ஆண்டு ‘ஆத்ம கவுரவம்’ என்ற தெலுங்கு படத்தை இயக்கினார். 

முதல் படமே வெற்றிப்பெற சிரிசிரி முவ்வா, சங்கராபரணம், சலங்கை ஒலி, சிப்பிக்குள் முத்து உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை இயக்கினார். தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் என அனைத்து மொழிகளிலும் 50-க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார். 

viswanath

கமலின் ஆஸ்தான இயக்குனராக அவர், ‘குருதிப்புனல்’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அதன்பிறகு முகவரி, ராஜபாட்டை, சிங்கம் 2, யாரடி நீ மோகினி, உத்தம வில்லன், லிங்கா உள்ளிட்ட பல தமிழ் படங்களில் குணசித்திர கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தியாவின் உயரிய விருதாக கருதப்படும் தாதாசாகேப் பால்கே விருது இவருக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோன்று பத்ம ஸ்ரீ விருதும் வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர பல மாநில விருதுகளை பெற்றுள்ளார். 

viswanath

1930-ஆம் ஆண்டு ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் பிறந்த அவர், ஐதராபாத்தில் வசித்து வந்தார். சமீபகாலமாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த அவருக்கு ஐதராபாத்தில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் 93 வயதாகும் அவர், நேற்றிரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கே.விஸ்வநாத்தின் மறைவு திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது இறுதி சடங்குகள் இன்று மாலை நடைபெறவுள்ளது. அவருக்கு பிரபலங்களும், ரசிகர்களும் இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

 

 

Share this story